இரு சக்கர வாகனங்களை, இலவசமாக பழுது பார்க்கும் முகாம்கள் சென்னையில் தொடங்கின:முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாகன ஓட்டிகள் நன்றி

இரு சக்கர வாகனங்களை, இலவசமாக பழுது பார்க்கும் முகாம்கள் சென்னையில் தொடங்கின:முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாகன ஓட்டிகள் நன்றி

ஞாயிறு, டிசம்பர் 13,2015,

சென்னையில் மழையால் சேதம் அடைந்த இரு சக்கர வாகனங்களை இலவசமாக பழுது நீக்கி கொடுக்கும் முகாம்கள் நேற்று தொடங்கின. இதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.

சென்னையில் சமீபத்தில் கொட்டித் தீர்த்த வரலாறு காணாத கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பிரதான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது.சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றதால், பெரும்பாலான மோட்டார் சைக்கிள்களின் என்ஜினில் தண்ணீர் புகுந்து பழுதாகின. இதுதவிர குடியிருப்பு வளாகங்களுக்குள் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களையும் மழை நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் களை ஓரங்கட்டினர்.தங்களது போக்குவரத்து தேவைகளுக்காக பஸ், ரெயில், ஷேர்-ஆட்டோ உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்தினார்கள். மழை ஏற்படுத்திய சேதத்தை ஈடுகட்டுவதற்கு இன்னும் அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்பதால், மோட்டார் சைக்கிள் பழுது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தியது.

ஜெயலலிதா அறிவிப்பு

இதையடுத்து மழை வெள்ளத்தால் பழுதடைந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோக்கள் ஆகியவற்றுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 200-க்கும் அதிகமான முகவர்கள் மூலம் இலவசமாக பழுதுபார்க்கும் சிறப்பு முகாம்கள் 12-ந்தேதி (நேற்று) முதல் 21-ந்தேதி வரை 10 நாட்களுக்கு நடத்தப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

மேலும் வாகனங்களை பழுதுபார்க்கும் முகாம் தொடர்பான முகவர்கள் பட்டியலும் தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இது மழையால் கடுமையான இழப்பையும், சேதத்தையும் சந்தித்த வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்தது. ஜெயலலிதா அறிவிப்பின்படி மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோக்களுக்கான இலவச பழுதுபார்க்கும் முகாம்கள் நேற்று தொடங்கின. சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை, அண்ணாநகர், சூளை உள்ளிட்ட 106 இடங்களில் இந்த முகாம்கள் நடைபெறுகின்றன.

காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த முகாம்களில், வாகன ஓட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டு வீடுகளிலும், கடைகளிலும் முடங்கிய தங்களுடைய மோட்டார் சைக்கிள்களை ஆர்வத்துடன் கொண்டு வந்தனர். ஒரே தெரு, குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள் 4, 5 வாகனங்கள் என மொத்தமாக லோடு ஆட்டோவில் ஏற்றி கொண்டு வந்தனர்.

முகாம் தொடங்கிய அடுத்த சில மணி நேரத்தில் சிறப்பு முகாமில் பழுதுபார்ப்பதற்காக வந்த மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. தமிழக அரசின் உத்தரவை ஏற்று, பழுதாகிய வாகனங்களை சிறப்பு முகாமில் விரைவாக பழுது நீக்கி கொடுப்பதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சில கம்பெனிகள் கூடுதலாக மெக்கானிக்குகளை களம் இறக்கி உள்ளனர்.
இதனால் பழுதுபார்ப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்றது. சில வாகன ஓட்டிகளுக்கு சிறிது நேரத்திலேயே வாகனங்கள் பழுது நீக்கி ஒப்படைக்கப்பட்டன. சிலருக்கு மோட்டார் சைக்கிள்கள் மறுநாள் பழுதுபார்ப்பு பணிகள் முடித்து ஒப்படைக்கப்படும் என்று முகவர்கள் டோக்கன் கொடுத்து அனுப்பியுள்ளனர். சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்களின் அருகே போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போக்குவரத்து போலீசாரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாகன ஓட்டிகள்  நன்றி

இதுகுறித்து சிறப்பு முகாமில் பங்கேற்று மோட்டார் சைக்கிள்கள் பழுது நீக்கப்பட்ட வாகன ஓட்டிகள் கூறுகையில், மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, நாங்கள் கடுமையான இழப்புகளை சந்தித்துவிட்டோம். மழையால் பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மாத சம்பளத்தை வைத்துதான் பழுதுபார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தோம்.
இந்தநிலையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா இலவச பழுது பார்க்கும் முகாம் ஏற்பாடு செய்து தந்திருப்பது மகிழ்ச்சியையும், ஆறுதலையும் தருவதாக உள்ளது. இதற்காக நாங்கள் ஜெயலலிதாவுக்கு மனதார நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்.