இலங்கை கடற்படையால் சுட்டு கொல்லப்பட்ட பிரிட்ஜோவின் சகோதரரின் கல்விச்செலவை அ.தி.மு.க. ஏற்கும் : ஓ.பன்னீர்செல்வம்

இலங்கை கடற்படையால் சுட்டு கொல்லப்பட்ட பிரிட்ஜோவின் சகோதரரின் கல்விச்செலவை அ.தி.மு.க. ஏற்கும் : ஓ.பன்னீர்செல்வம்

ஞாயிறு, மார்ச் 12, 2017,

ராமநாதபுரம் : துப்பாக்கி சூட்டில் இறந்த மீனவரின் குடும்பத்துக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆறுதல் தெரிவித்து, ‘‘மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண பிரதமரிடம் வலியுறுத்துவேன்’’ என்றார்.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அறவழிப்போராட்டம் நடத்தி வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள பிரிட்ஜோவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் மீனவர்கள் போராட்டம் நடத்திவரும் தங்கச்சி மடத்துக்கு சென்று பிரிட்ஜோவின் குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் போராட்டக்காரர்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:–
நமது மீனவ சகோதரன் பிரிட்ஜோ இலங்கை ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட துயர சம்பவம் தமிழக மக்களின் மனதில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இனிமேல் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்காமல் தடுப்பது மத்திய–மாநில அரசுகளின் கடமையாகும்.
இப்பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து தமிழக மீனவர் பிரச்சினையில் தனிகவனம் செலுத்தி எதிர்காலத்தில் மீனவர்களின் உயிரிழப்பு நடக்காமல் தடுக்க வலியுறுத்துவேன். பிரதமரை சந்திக்கும்போது மீனவர்களின் நியாயமான உணர்வுகளையும், கோரிக்கைகளையும் எடுத்துக்கூறி மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என உறுதி கூறுகிறேன்.
இந்த குடும்பத்தின் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் பிரிட்ஜோவின் சகோதரரின் கல்விச்செலவை அ.தி.மு.க. ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.