இலங்கை தமிழர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் மகத்தான தலைவர் முதலமைச்சர் ஜெயலலிதா : இலங்கை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பாராட்டு

இலங்கை தமிழர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் மகத்தான தலைவர் முதலமைச்சர் ஜெயலலிதா : இலங்கை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பாராட்டு

வெள்ளி, மே 27,2016,

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று, 6வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, இலங்கை வடமாகாண முதலமைச்சர், நீதியரசர் திரு. விக்னேஸ்வரன், வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும், கொள்கை பிறழாமல், துணிச்சலாக குரல் கொடுத்து வரும் தலைவர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா என்றும், தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் மக்களை, மனம்கோணாமல் முதலமைச்சர் ஜெயலலிதா பராமரித்து வருவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வடமாகாண சபை கூட்டத்தில் உரையாற்றிய, வடமாகாண முதலமைச்சர், நீதியரசர் திரு. விக்னேஸ்வரன், தமிழகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்று, ஆறாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளது தனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருவதாக தெரிவித்தார். இதற்காக, இலங்கை வட மாகாணத்தைச் சேர்ந்த அனைவர் சார்பிலும் மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா இதுவரை ஆற்றிய சேவை, தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர்களால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதே இந்த வெற்றிக்கு காரணம் என்றும் திரு. விக்னேஸ்வரன் தெரிவித்தார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் இந்த வெற்றியால், இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மனமகிழ்ச்சியும், நம்பிக்கையும், தைரியமும் அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இலங்கை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும், அவர்களின் பாதுகாப்பிற்காகவும், கொள்கை பிறழாமல், துணிச்சலாக குரல் கொடுத்து வருபவர் முதலமைச்சர் ஜெயலலிதா என்றும் திரு. விக்னேஸ்வரன் பாராட்டு தெரிவித்தார்.