இலவச கால்நடை அவசர சிகிச்சை ஊர்தி திட்டம் விரைவில் அமல் படுத்த படும் : அமைச்சர் பா.பாலகிருஷ்ண ரெட்டி தகவல்

இலவச கால்நடை அவசர சிகிச்சை ஊர்தி திட்டம் விரைவில் அமல் படுத்த படும் : அமைச்சர் பா.பாலகிருஷ்ண ரெட்டி தகவல்

சனி, ஆகஸ்ட் 13,2016,

தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு 5 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்ட இலவச கால்நடை அவசர சிகிச்சை ஊர்தி திட்டம் நிகழாண்டிலேயே மீதமுள்ள 27 மாவட்டங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது என தமிழக கால்நடை பாராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ண ரெட்டி கூறினார்.

கால்நடை மருத்துவ மாணவர்களுக்கான 8 ஆவது பண்ணை-செல்லப் பிராணிகளுக்கான மருத்துவச் சிகிச்சை பயிற்சிக் கருத்தரங்கம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இதில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பேசியது:

தமிழகத்தில் கிராமப்புற ஏழை விவசாயிகளுக்கு கால்நடை மருத்துவச் சேவை எளிதில் கிடைக்கும் வகையில், இலவச கால்நடை மருத்துவ அவசர சிகிச்சை ஊர்தி திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் அறிமுகம் செய்யப்பட்டது.

முதல் கட்டமாக 5 மாவட்டங்களில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் வகையில், மீதமுள்ள 27 மாவட்டங்களிலும் நிகழாண்டிலேயே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

கால்நடை மருத்துவ மாணவர்களின் சிகிச்சைத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், பல்கலைக்கழகம், கல்லூரிகளில் இயங்கி வரும் கால்நடை மருத்துவமனைகளின் மேம்பாட்டுக்காக ரூ. 3.25 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது என்றார் அமைச்சர் பா.பாலகிருஷ்ண ரெட்டி .