இலவச மின்சாரம் கிடைக்காத நெசவாளர்கள் புகார் அளிக்கலாம்: கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவிப்பு

இலவச மின்சாரம் கிடைக்காத நெசவாளர்கள் புகார் அளிக்கலாம்: கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவிப்பு

வியாழன் , ஜூன் 02,2016,

இலவச மின்சாரம் கிடைக்காத நெசவாளர்கள் கைத்தறித்துறையிடம் புகார் அளிக்கலாம் என கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.  காஞ்சிபுரம் நகரத்தில் பட்டுக் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஓரிக்கை பகுதியில் உள்ள தமிழ்நாடு ஜரிகை உற்பத்தி ஆலையில் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது, ஆலையில் பணி புரியும் தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும், ஜரிகை உற்பத்தி செய்யும் தொழில் முறைகள் மற்றும் அவற்றின் தொழில்நுட்பம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர், வெள்ளி ஜரிகையின் மீது தங்கமுலாம் பூசும் பணிகளை பார்வையிட்டார்.  இதை தொடர்ந்து, தள்ளுபடி சேலைகள் விற்பனை செய்வதற்காக, காஞ்சிபுரம் பகுதியில் அனைத்து பட்டுகூட்டுறவு சங்கங்களும் இணைந்து பட்டுசேலை கண்காட்சி நடத்துமாறு, கைத்தறித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  பின்னர், நிருபர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது:  பட்டு கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர் களுக்கு, 200 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், பட்டு கூட்டுறவு சங்கங்களில் தொழில் கிடைக்கப்பெறாத நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் உள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழக அரசு அறிவித்து, இன்னும் ஒரு தவணை கூட இலவச மின்சாரம் வழங்கப்படாத நிலையில், இவ்வாறான புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இலவச மின்சாரம் கிடைக்கப்பெறாத நெசவாளர்கள், இதுதொடர்பான புகார் மனுக்களை கைத்தறித்துறையிடம் அளிக்கலாம். மனுக்கள் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.