ஈரான் நாட்டு சிறையில் இருந்து விடுதலையான 44 மீனவர்கள் புது வாழ்வு தொடங்க தலா ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

ஈரான் நாட்டு சிறையில் இருந்து விடுதலையான 44 மீனவர்கள் புது வாழ்வு தொடங்க தலா ரூ.5 லட்சம் உதவித்தொகை  வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளி, மார்ச் 04,2016,

ஈரான் சிறையில் இருந்து விடுதலையான 44 தமிழக மீனவர்கள் புது வாழ்வு தொடங்க  தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து  முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

ஐக்கிய அரபு நாட்டில் அஜ்மன் மற்றும் சார்ஜாவில் தனியார் மீன்பிடி நிறுவனங்களுக்கு சொந்தமான மீன்பிடி படகுகளில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்த ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 44 தமிழக மீனவர்கள் கடந்த கடந்த ஆண்டு நவம்பர் 29-ம் தேதி  கடலில் மீன்பிடிக்கச் சென்று, மீன்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வழி தவறி, ஈரான் நாட்டு கடல் பகுதிக்குள்சென்று விட்டனர். ஈரான் நாட்டு கடற்பகுதிக்குள் சென்றதன் காரணமாக, அந்நாட்டு கடலோர காவல்படையினரால் கடந்த டிசம்பர் 1-ம் தேதி அன்று கைது செய்யப்பட்டு, சிறையில்அடைக்கப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட இந்திய தூதரக அதிகாரிகளையும், மத்திய அரசின் வெளியுறவுத் துறையினையும் தொடர்பு கொண்டு ஈரான் நாட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை பெற்றிட தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் உத்தரவிட்டிருந்ததன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு, ஐக்கிய அரபு நாடு மற்றும் ஈரான் நாட்டிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளையும், மத்திய அரசின் வெளியுறவு துறையினையும் தொடர்பு கொண்டு தமிழக மீனவர்களின் விடுதலைக்கான சட்டஉதவிகளை அளிக்கும்படி கோரியது. தமிழக அரசு எடுத்த தொடர் முயற்சிகளின் காரணமாக ஈரான் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 44 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்ட 44 தமிழக மீனவர்களும் 3-ம் தேதி தமிழகம் திரும்பினர். இந்த மீனவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு தமிழக அரசின் செலவில் அனுப்பி வைக்கப்பட்டனர். ஈரான் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 44 தமிழக மீனவர்களின் குடும்பத்தினரின் வறிய நிலையினைக் கருத்தில் கொண்டு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, மீனவர் ஒவ்வொருவருக்கும் 5 லட்சம் ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்க நான் ஆணையிட்டுள்ளேன். விடுதலையான மீனவர்கள் இந்த உதவித்தொகை மூலம் தமிழ்நாட்டில் புது வாழ்வை துவங்க இயலும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.