ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு

வியாழன் , மே 19,2016,

பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடைபெறுவதாக புகார் தெரிவித்த, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக தமிழக முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் புதன்கிழமை அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதில், கடந்த ஏப்ரல் 30-இல் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடைபெறுவதாகவும், பணம் பெற்றுக்கொண்டு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமிக்கப்படுகின்றனர் என்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருந்தார். அவரது குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லை, முதல்வரின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், உள்நோக்கத்துடன் அவதூறான கருத்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.

இது, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 500, 501-இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். ஆகையால், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு, முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.

இதே விவகாரத்தில், தமிழக ஆளுநர் கே.ரோசய்யா சார்பிலும் இளங்கோவனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.