“உங்கள் சொந்த இல்லம்” திட்டம்: ரூ. 460 கோடியில் சீருடை பணியாளர்களுக்காக 2673 வீடுகள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

“உங்கள் சொந்த இல்லம்” திட்டம்: ரூ. 460 கோடியில் சீருடை பணியாளர்களுக்காக 2673 வீடுகள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

வெள்ளி, பெப்ரவரி 26,2016,

காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில் “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் சீருடைப் பணியாளர்களுக்காக 459 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2673 வீடுகளை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்து, அவ்வீடுகளை வழங்கிடும் அடையாளமாக 14 சீருடைப் பணியாளர்கள் குடும்பத்தினருக்கு வீடுகளுக்கான சாவிகளை வழங்கினார்கள்.  இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

மக்கள் நலன் காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களின் நலன் காக்கும் வண்ணம், காவலர்கள் ஓய்வு பெற்ற பின் அவர்களுக்கு சொந்த வீடு கிடைத்திடும் வகையில், “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ், காவல் துறையில் காவலர்கள் முதல் துணைக் கண்காணிப்பாளர்கள் வரையிலான பதவிகளில் உள்ளவர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்போர் முதல் கோட்ட அலுவலர்கள் வரையிலான பதவிகளில் உள்ளவர்களுக்கும் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் மூலமாக சொந்த வீடு கட்டித் தரும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூர் கிராமத்தில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்து, அக்கழகத்தின் மூலம் வீடுகள் கட்டித் தரப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதன்படி, முதற்கட்டமாக 26.10.2012 அன்று மேலக்கோட்டையூரில் 2,673 குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். இரவு பகல் பாராமல், லட்சியத்துடன் ஓய்வில்லாமல், பணியாற்றும் சீருடைப்  பணியாளர்கள் ஓய்வு பெற்ற பிறகு அமைதியான சூழலில் மன நிம்மதியுடன் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கில் “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில் 47.60 ஏக்கர் நிலத்தில், 20,50,150 சதுர அடி கட்டட பரப்பளவில் 459 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2673 வீடுகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்து, அவ்வீடுகளை சீருடைப் பணியாளர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 14 சீருடைப் பணியாளர்கள் குடும்பத்தினருக்கு வீடுகளுக்கான சாவிகளை வழங்கினார்.

அப்போது, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா “புதிய இல்லத்தில் வளத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும்” என்று வாழ்த்தினார். இப்புதிய குடியிருப்புகளில், காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் அதற்கு நிகரான பதவி வகிப்பவர்களுக்கு 1100 சதுர அடி கட்டட பரப்பளவில் தரை மற்றும் முதல் தளத்துடன் கூடிய 166 வீடுகள், உதவி ஆய்வாளர் / ஆய்வாளர் மற்றும் அதற்கு நிகரான பதவி வகிப்பவர்களுக்கு 850 சதுர அடி கட்டட பரப்பளவில் 1190 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள், காவலர் / தலைமைக் காவலர் மற்றும் அதற்கு நிகரான பதவி வகிப்பவர்களுக்கு 650 சதுர அடி கட்டட பரப்பளவில் 1317 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இக்குடியிருப்புகளில் மின்தூக்கி வசதி, மழைநீர் சேகரிப்பு வசதி, தீயணைப்பு உபகரணங்கள், இடிதாங்கி வசதி, வாகன நிறுத்துமிடம், சூரிய சக்தியுடன் கூடிய தெருவிளக்கு, கான்கிரீட் சாலைகள், சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், சென்னை, கடலூர், திண்டுக்கல், மதுரை, நாமக்கல், இராமநாதபுரம், தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 202 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1794 காவல் துறை குடியிருப்புகள், அரியலூர் மாவட்டம் – தேளூர், கோயம்புத்தூர் மாவட்டம் – கருமத்தாம்பட்டி, கடலூர் மாவட்டம் – சிதம்பரம், திண்டுக்கல் மாவட்டம் – ஷாணார்பட்டி மற்றும் கீரணூர், ஈரோடு மாவட்டம் – புஞ்சைபுலியம்பட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் – படாளம், மனம்பதி, வாலாஜாபாத் மற்றும் சோமங்களம், கன்னியாகுமரி மாவட்டம் – கன்னியாகுமரி மற்றும் பூதபாண்டி, புதுக்கோட்டை மாவட்டம் – ஆலங்குடி, இராமநாதபுரம் மாவட்டம் – இராமேஸ்வரம் கோயில், சிவகங்கை மாவட்டம் – நாச்சியாபுரம், செட்டிநாடு மற்றும் திருகோஷ்டியூர், நீலகிரி மாவட்டம் – ஊட்டி மத்திய நகரம், திருவண்ணாமலை மாவட்டம் – மோரணம் மற்றும் பாச்சல், திருநெல்வேலி மாவட்டம் – தேவர்குளம், வேலூர் மாவட்டம் – வேலூர் தெற்கு, விழுப்புரம் மாவட்டம் – விழுப்புரம், ஆகிய இடங்களில் 13 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 23 காவல் நிலையங்களுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள சொந்தக் கட்டடங்கள், அரியலூரில் காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம், கடலூர் மாவட்டம் – திட்டக்குடி, பெரம்பலூர் மாவட்டம் – மங்களமேடு, சேலம் மாவட்டம் – வாழப்பாடி, தஞ்சாவூர் மாவட்டம் – ஒரத்தநாடு ஆகிய இடங்களில் காவல் துணை கண்காணிப்பாளர் குடியிருப்புடன் கூடிய முகாம் அலுவலகம், கடலூர், திண்டுக்கல் மற்றும் மதுரையில் ஆயுதப்படை நிர்வாகக் கட்டடங்கள், கடலூர் மாவட்டம் – தேவானம்பட்டினம் மற்றும் பரங்கிப்பேட்டை, புதுக்கோட்டை மாவட்டம் – மிமிசல், நாகப்பட்டினம் மாவட்டம் – திருமுல்லைவாசல், இராமநாதபுரம் மாவட்டம் – தொண்டி ஆகிய இடங்களில் கடலோரக் காவல் நிலையங்கள், கடலூர் மற்றும் வேலூரில் காவலர் மருத்துவமனைகள், மதுரையில் மாநகர காவல் அலுவலகம், தஞ்சாவூரில் மாவட்ட காவல் அலுவலகம், சிவகங்கையில் மாவட்ட காவல் அலுவலக இணைப்புக் கட்டடம், கோயம்புத்தூரில் ஆயுதப்படை வளாகம், விழுப்புரத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கான விருந்தினர் இல்லம், இராமநாதபுரத்தில் காவலர்களுக்கான தங்குமிடம், மதுரை மாவட்டம் – இடையாப்பட்டியில் காவலர் பயிற்சிப் பள்ளி, இராமநாதபுரம் மாவட்டம் – திருவாடானை மற்றும் மதுரை மாவட்டம் – மேலூரில் திருப்பி நிலையங்கள் கோயம்புத்தூர் மாவட்டம் – வாளையார், ஈரோடு மாவட்டம் – ஆசனூர் ஆகிய இடங்களில் மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு சோதனைச் சாவடிகள், என 43 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 26 காவல் துறை கட்டடங்கள், திருச்சிராப்பள்ளி மத்திய சிறை வளாகத்தில் 1 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறைத் துறையினருக்கான 25 குடியிருப்புகள், சென்னை – எழும்பூரில் சிறைத்துறை தலைமையகக் கட்டடம், திருவள்ளூர் மாவட்டம் – பூந்தமல்லியில் தனி கிளை சிறைக்கு கூடுதல் கட்டடம், கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்ட மத்திய சிறைச்சாலைகளில் பெண்களுக்கான தனிச் சிறைகள், காஞ்சிபுரம் மாவட்டம் – மாவட்ட சிறையாக தரம் உயர்த்தப்பட்ட செங்கல்பட்டு கிளைச் சிறை, என 14 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 சிறைத் துறைக் கட்டடங்கள், சென்னை – எழும்பூரில் 5 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் அலுவலகக் கட்டடம், திருவண்ணாமலை மாவட்டம் – சேத்துப்பட்டில் 47 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம்,

சென்னை – ஆலந்தூரில் 11 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்கக கட்டடம்; என மொத்தம் 753 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத் துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தலைமைச் செயலாளர் கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, காவல் துறை தலைமை இயக்குநர்  அசோக் குமார், சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் டி.கே. ராஜேந்திரன், காவல் துறை இயக்குநர் / சிறைத் துறைத் தலைவர் (கூடுதல் பொறுப்பு) எஸ். ஜார்ஜ், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் ஆர்.சி. குடாவ்லா, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முகமது ஷகில் அக்தர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இணை இயக்குநர் ஜி.வெங்கடராமன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.