உடலுறுப்புகள் தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டிலேயே முதலிடம்: முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டி தமிழகத்திற்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவிப்பு

உடலுறுப்புகள் தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டிலேயே முதலிடம்: முதலமைச்சர் ஜெயலலிதாவை  பாராட்டி தமிழகத்திற்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவிப்பு

வெள்ளி,நவம்பர்,27-2015

மருத்துவ ரீதியில் மக்களுக்கு சேவை செய்வதில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அளப்பரியவை என்று மத்திய அரசு பாராட்டியுள்ளது. உடலுறுப்புகள் தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டிலேயே முதலிடம் வகிப்பதற்காக தமிழகத்திற்கு விருது வழங்கி கவுரவித்துள்ளது.

இந்திய உடலுறுப்புதான தினவிழா டெல்லியில் இன்று நடைபெற்றது. மத்திய சுகாதாரத்தறை அமைச்சர் திரு. ஜெகத் பிரசாத் நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், உடலுறுப்புகள் தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக பாராட்டு தெரிவித்து விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை மத்திய அமைச்சர் திரு. ஜெகத் பிரசாத் நட்டா-விடம் இருந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய மத்திய அமைச்சர் திரு.ஜெகத் பிரசாத் நட்டா, மருத்துவ ரீதியில் மக்களுக்கு சேவை செய்வதில், முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா எடுத்து வரும் நடவடிக்கைகள் அளப்பரியவை என்றும், அவருடைய முயற்சிகளால்தான் தமிழகம் இந்த விருதினை பெற்றுள்ளது என்றும் பாராட்டினார்.

விருதினைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிக்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்டு வரும் திட்டங்களையும், செயல்பாட்டினையும் விவரித்தார். நடப்பு நிதியாண்டில் சுகாதாரத்துறைக்காக 8,245 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்புக்கான இடங்கள் ஆயிரத்து 945-ல் இருந்து 2,655 ஆக உயர்த்தப்பட்டிருப்பதோடு, புதிதாக மேலும் பல மருத்துவ மற்றும் பல்மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால், உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 3,966 உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாகவும் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் திரு.B.P. ஷர்மா  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.