உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் மீண்டும் முதலிடம் ; மத்திய அரசு விருது வழங்கி கவுரவிப்பு

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் மீண்டும் முதலிடம் ; மத்திய அரசு விருது வழங்கி கவுரவிப்பு

வியாழன் , டிசம்பர் 01,2016,

மருத்துவ ரீதியில் மக்களுக்கு சேவை செய்வதில் முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அளப்பரியவை என்று மத்திய அரசு பாராட்டியுள்ளது. உடலுறுப்புகள் தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டிலேயே முதலிடம் வகிப்பதற்காக தமிழகத்திற்கு விருது வழங்கி கவுரவித்துள்ளது.டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, தமிழக அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரிடம் மத்திய அரசின் விருதினை வழங்கினார்.

தமிழக மக்களுக்கு உலகத்தரத்திலான மருத்துவ சேவை வழங்க, முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டுவரும் தீவிர நடவடிக்கைகளை பாராட்டி வரும் மத்திய அரசு, உடலுறுப்புகள் தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக, கடந்த ஆண்டு விருது வழங்கி கவுரவித்தது.

இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், உடலுறுப்பு தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக பாராட்டு தெரிவித்து, 2-வது முறையாக விருது வழங்கி கவுரவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் இந்த விருதை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்த்துக்கள் மற்றும் நல்லாசியுடன் இந்திய அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மூலமாக நடைபெறும் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் மூலமாக நடத்தப்படும் 7-வது இந்திய உடல் உறுப்பு தான நிகழ்வில் கலந்து கொள்வதில் பெருமையடைகிறேன்.

இந்த நிகழ்வின் நோக்கம் உடல் உறுப்பு தானத்தில் முதல் இடத்தில் உள்ள மாநிலங்களை, மருத்துவமனைகளை, ஒருங்கிணைப்பாளர்களை, உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்தினரை கவுரவப்படுத்துவதும், மென்மேலும் அவர்கள் இதில் சிறக்க ஊக்குவிப்பதும் ஆகும். அந்த வகையில் இந்திய அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை இரட்டிப்பு மகிழ்ச்சியை எங்களுக்கு தந்திருக்கிறது. அதற்கான காரணம் முதல்வர் ஜெயலலிதாவின் அரசு இரண்டாவது முறையாக தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தில் முதல் நிலையில் உள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின், தொலை நோக்கு திட்டங்களினாலும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறைக்காக பெருந்தொகையை ஒதுக்கீடு செய்து மருத்தவத்தில் உயிர்ப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் அதன் பரிணாம வளர்ச்சியாக முதல்வர் ஜெயலலிதாவை தலைவராகக் கொண்டு 12.12.2014-ல் உருவாக்கப்பட்டதுதான் டிரான்ஸ்டன் என்ற அமைப்பு நிர்வாக ரீதியாக மட்டுமல்லாமல் அறிவியல் ரீதியாகவும் செம்மையாக செயல்படுவதின் அடையாளமாக இதுவரை தமிழகத்தில் 895 கொடையாளர்களிடமிருந்து 4992 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை மூலம் உடலுறுப்பு தானத்தில் தமிழ்நாடு இந்தியாவின் மற்ற மாநிலங்களை விஞ்சி நிற்கிறது. தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இச்சிகிச்கைள் வழங்கப்படுகிறது. இச்சிகிச்சைகளுக்கு தமிழ்நாட்டில் மட்டும் தான் ரூ.30 லட்சம் வரை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அதிகமான தொகை ஒதுக்கப்படுகிறது.

பிரதமர் மான் கி பாத்” உரையில் கூறியதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன். தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் தலைசிறந்து முன்னோடி மாநிலமாகவும், மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டை பின்பற்றக் கூடியவகையிலும் செயல்படுகிறது என்றும் கூறினார். அதேபோன்று பிரிட்டிஷ் மருத்துவ இதழ் உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாட்டை இந்தியாவில் உள்ள பிறமாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என்றும், தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலம் என்றும் குறிப்பிட்டுள்ளது மகிழ்ச்சியான ஒன்று. அதற்கு இந்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்றுஅமைப்பிற்கு நன்றி கூற விரும்புகிறேன்.

தமிழ்நாடு அரசு உடல் உறுப்பு தானம் செய்வதில் உறுப்பை தானமாக பெற்று பயனடைவதில் பல்வேறு ஒழுங்குமுறையை வகுத்துள்ளது. ஒருவர் மூளைச்சாவு அடைவதன் காரணமாக உடல் உறுப்பு தானம் செய்வதற்கு முன்பு கட்டாய சான்றிதழ் பெற வேண்டும். அவரிடம் தானமாக பெற்ற உறுப்புகள் யாருக்கெல்லாம் பொருந்தும் வகையில் பயன்படுத்துவது, அதற்குரிய மருத்துவ நுட்ப நடைமுறைகள், தானமாக பெற்ற உறுப்புகள் எவ்வாறு பயனாளிகளை துரிதமாக சென்றடைவது அதற்குரிய வழிமுறைகள் போன்ற ஒழுங்கு முறைகளை வகுத்துள்ளது.

உடல் உறுப்பு தானம் தமிழ்நாட்டில் சிறந்து விளங்குவதற்கு வெளிப்படைத்தன்மை, பரவலாக்கம், நடுநிலைப்பங்கு, இடர்களை களைதல், தன்னார்வலர்களின் சேவை மற்றும் அறிவார்ந்த ஊடகம் இந்த காரணங்களால் தமிழ்நாடு அரசு, உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்குகிறது. மேலும் தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தில் முன்னோடி மாநிலமாக தொடர்ந்து திகழும். முதல்வர் அம்மாவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசினார்.