உடல் நலக்குறைவு மற்றும் சாலை விபத்துகளில் இறந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

உடல் நலக்குறைவு மற்றும் சாலை விபத்துகளில் இறந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

திங்கள் , ஆகஸ்ட் 22,2016,

சென்னை : உடல்நலக்குறைவு மற்றும் சாலை விபத்தில் பலியான 14 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

  இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பண்ருட்டி போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த துரை, கடலூர் மாவட்டம் துறைமுகம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த மோகன்தாஸ், சங்கரன்கோவில் போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த முருகன், வேலூர் மாவட்ட ஆயுதப்படை வாகனப் பிரிவில் இரண்டாம் நிலைக் காவலராகப்

பணிபுரிந்த நவீன், கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்த இளையராஜு ஆகியோர் உடல் நலக் குறைவால் இறந்தனர். 

போளூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த சீ.குப்புசாமி, சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த பிரபாகரன், வேலூர் காவலர் பயிற்சி பள்ளியில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த செல்லம்மாள், ஈரோடு சித்தோடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த கதிர்வேல், சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த ஏ.நாகராஜன் ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமாயினர்.

ராஜபாளையத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11-ம் அணியில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த இளங்கோ, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 4-ஆம் அணி, சி நிறுமத்தில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிந்த ரஞ்சித்குமார், தூத்துக்குடி சாயர்புரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த சுப்பையா, கூடங்குளம் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்த முருகன் ஆகியோர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர்.

இந்தச் செய்திகளை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.