மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் மாற்றி அமைக்கப்படுவதை கருணாநிதி ஏற்றுக்கொள்வாரா? அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி கேள்வி

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் மாற்றி அமைக்கப்படுவதை கருணாநிதி ஏற்றுக்கொள்வாரா? அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி கேள்வி

புதன், ஏப்ரல் 06,2016,

உதய் திட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணத்தை மாற்றி அமைக்கப்படுவதை தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏற்றுக்கொள்வாரா? என்று அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

மத்திய மின்சாரம், நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை மந்திரி பியூஷ் கோயல், டெல்லியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் ‘உதய்’ திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு இன்னமும் கையொப்பம் இடவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார். உதய் திட்டத்தில் உள்ள குறைகளையெல்லாம் களைந்தால்தான் அதில் தமிழ்நாடு அரசு பங்கேற்கும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், மீட்டர்கள் பொருத்தப்படாத மின் இணைப்புகளால் மின்வாரியத்திற்கு நஷ்டம் ஏற்படுகிறது என்றும் மின்திருட்டு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரை விவசாய மோட்டார் பம்பு செட்டுகள் மற்றும் குடிசைகளுக்கு மட்டும்தான் மின்பயனீட்டு மீட்டர் பொருத்தப்படுவதில்லை.

அப்படியானால், விவசாயிகளும், குடிசை வாழ் ஏழை மக்களும் மின்திருட்டில் ஈடுபடுகின்றனர் என்று தெரிவிக்கின்றாரா? அவருடைய இந்த கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் 98 சதவீதத்திற்கும் அதிகமாக மின்கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. மின் தடத்தில் 0.01 சதவீதத்திற்கும் குறைவான அளவே மின் திருட்டு உள்ளது. மின் உபயோகத்தை துல்லியமாக கணக்கிட 2 கோடியே 35 லட்சம் குறைவழுத்த மொத்த மின் இணைப்புகளில் ஒரு கோடியே 40 லட்சம் இணைப்புகளில் மின் அளவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 95 லட்சம் குறைவழுத்த மின் இணைப்புகளுக்கும் இவை விரைவில் பொருத்தப்படும்.

இந்த மின் அளவிகளை பொருத்துவதற்கான 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் செலவையும் தமிழ்நாடு மின்சார வாரியமே ஏற்றுள்ளது. ஆனால் இந்த செலவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள உதய் திட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை.

உதய் திட்டத்தின் மூலம் மின் ஒட்டு மொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்பு 2018–19–ம் ஆண்டுக்குள் 15 சதவீதமாக குறைக்கப்படவேண்டும் என்ற வரையறை இருந்தாலும், அதற்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த மத்திய அரசு நிதி வழங்க வகை செய்யப்படவில்லை.

உதய் திட்டம் தமிழக மக்களுக்கு பயன் அளிக்காத திட்டம்தான். இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 75 சதவீத கடனை மாநில அரசு எடுத்துக்கொண்டு அதற்கு ஈடாக நிதிப்பத்திரங்களை வெளியிட்டால், நிதிப் பற்றாக்குறை தொடர்பாக நிதி பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மை வரையறைகளை மீறவேண்டிய நிலை ஏற்படும்.

எனவேதான், இந்த வரையறையிலிருந்து 15 ஆண்டுகளுக்கு தளர்வு வழங்கிட வேண்டும் எனவும், மாநில அரசு எடுத்துக்கொள்ளும் கடன் தொகையில் 25 சதவீதத்தை மத்திய அரசு மானியமாக வழங்கவேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த திட்டத்திற்காக மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்க முன்வராத நிலையில் இதுபோன்ற ஒரு திட்டத்தினால் என்ன பயன்? மேலும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணங்களை மாற்றியமைப்பது என்பது எந்த விதத்தில் நியாயமாகும்?

மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், எல்இடி பல்புகள் வழங்கும் உஜாலா திட்டம் பற்றி தெரிவித்துள்ளார். இதற்கும் மத்திய அரசு எந்தவித மானியமும் வழங்குவதில்லை. மத்திய அரசு இந்த திட்டத்தை தொடங்குவதற்கு முன்பாகவே குடிசைகளில் வாழும் ஏழை, எளியோருக்கு விலையில்லா எல்இடி பல்பு வழங்கும் திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவிட்டார். 8.75 லட்சம் எல்இடி பல்புகள் விலையில்லாமல் குடிசை மின் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பாக டாக்டர் கஸ்தூரி ரங்கன் அறிக்கையின்படி அறிவிக்கையை வெளியிட தமிழ்நாடு அரசு இன்னமும் கருத்துரு அனுப்பவில்லை என்றும் இது சிறந்த நிர்வாக முறையல்ல என்றும் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

அவர் தலைமையிலான குழுவின் அறிக்கையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எதிரான பல்வேறு பரிந்துரைகள் உள்ளன. எனவே தான் மக்களை பாதிக்காத வண்ணம் சுற்றுச்சூழல் கூர் உணர்வு பகுதிகளை வரையறுக்க தமிழ்நாடு அரசு எதிர்வரும் மே மாதம் வரை கால அவகாசம் கேட்டுள்ளது.

சிறந்த நிர்வாகம் பற்றி தமிழக அரசுக்கு பாடம் சொல்லித்தர முயன்றுள்ளார். தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்ட பல்வேறு கருத்துருக்களுக்கு அவரது அமைச்சகத்தில் விரைவாக ஒப்புதல் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலில் அவர் முயற்சிக்க வேண்டும்.

இதில் தி.மு.க தலைவர் கருணாநிதியும் விளக்கங்களை கோரியுள்ளார். உதய் திட்டம் ஏன் செயல்படுத்த இயலாது என்பதை ஏற்கனவே கூறியிருக்கிறேன். அதில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணங்கள் மாற்றியமைக்கப்படுவதை கருணாநிதி ஏற்றுக்கொள்கிறாரா? என்று கேட்கப்பட்டிருந்தது. தற்போதைய அவரது அறிக்கையை படிக்கும்போது, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படுவதை கருணாநிதி ஏற்றுக்கொள்கிறார் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

அவர் குழப்பமான ஒரு தெளிவற்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன் முடிவில் 35 லட்சம் எல்இடி பல்புகள் பொருத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கணக்கு சொல்கிறது எனவும், அதனால் 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்றும் ஒரு இதழில் வெளியிடப்பட்ட அவதூறு செய்தியை அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

301.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 834 எண்ணிக்கையிலான குழல் விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மதுரை, திருச்சி, சேலம், வேலூர், திருப்பூர், ஈரோடு ஆகிய மாநகராட்சிகளிலும், 15 நகராட்சிகளிலும் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 578 தெரு மின் விளக்குகள் எல்இடி விளக்குகளாக 193.65 கோடி ரூபாய் செலவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை மாநகராட்சியிலும் இணைக்கப்பட்ட பகுதிகளிலும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் எல்இடி விளக்குகள் அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி, 79 ஆயிரத்து 988 எல்இடி விளக்குகள் அமைக்கும் பணிகள் 256.15 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 30 ஆயிரத்து 12 எல்இடி விளக்குகள் அமைக்கும் பணிகள் 145 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட பணி ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

எல்இடி விளக்குகளுக்கான செலவு 22 கோடி ரூபாய் மட்டுமே ஆகும். ஆனால் 145 கோடி ரூபாய் என கூறுவது முற்றிலும் அவதூறான பொய் செய்தி. அனைத்து உள்ளாட்சிகளிலும் சேர்ந்து மொத்தம் 2,07,566 தெரு விளக்குகள் மட்டுமே எல்இடி விளக்குகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில் 35 லட்சம் எல்இடி பல்புகள் பொருத்தப்பட்டதாகக் கூறுவது கற்பனையே அன்றி வேறென்ன?

மத்திய அரசின் பல்வேறு பொதுத் துறைகள் இணைந்து ஏற்படுத்திய இ.இ.எஸ்.எல். நிறுவனத்தின் மூலம் இந்தப் பணிகள் ஏன் மேற்கொள்ளப்படவில்லை? என்றும் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிறுவனம் 2010–ம் ஆண்டு முதலே உதவி புரிந்து வருகிறது. இந்த மத்திய அரசின் நிறுவனம் நேரடியாக இந்த வேலைகளை செய்வதில்லை.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதால் ஏற்படும் சேமிப்பை கணக்கிடுவதில் ஒப்பந்தப்புள்ளி அளிக்கும் நிறுவனம், உள்ளாட்சி அமைப்பு மற்றும் இ.இ.எஸ்.எல். நிறுவனம் ஆகியவற்றிடையே ஏற்படும் வேறுபாடுகள் காரணமாக இந்த திட்டம் அகில இந்திய அளவில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான உள்ளாட்சி அமைப்புகளிலேயே செயல்படுத்தப்பட்டுள்ளது.

இ.இ.எஸ்.எல். நிறுவனத்திடமிருந்து கடன் பெற்று திட்டத்தை செயல்படுத்தினால், அதன் செலவை திரும்பப்பெற 16.6 ஆண்டுகள் ஆகும். ஆனால் மாநகராட்சியே இதனை செயல்படுத்தினால் 4.6 ஆண்டுகளுக்குள்ளாகவே முதலீட்டை திரும்பப் பெற்றுவிட இயலும்.

மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் மிகப்பெரும் 2ஜி ஊழலை நிகழ்த்தினார் என்றும், காற்றிலேயே ஊழலை நிகழ்த்தியவர்கள் தி.மு.க.வினர் என்றும் குறிப்பிட்டுள்ளார். 2ஜி ஊழலில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என மத்திய தணிக்கை துறை தெரிவித்துள்ளது என்று கூறி, தற்போதைய மத்திய அரசால் 2ஜி அலைக்கற்றினை ஏலம் விட்டதில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு பெறப்பட்டுள்ளது என்றெல்லாம் தெரிவித்துள்ளாரே. இதற்கு பதில் என்ன என்பதை கருணாநிதி தெரிவிக்கட்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.