உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் 91,308 பேர் அதிமுகவில் இணைந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் 91,308 பேர் அதிமுகவில் இணைந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

வியாழன் , செப்டம்பர் 15,2016,

சென்னை ; பல்வேறு கட்சிகளை சேர்ந்த 91,308 பேர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று பேசிய முதல்வர் ஜெயலலிதா, வரவிருக்கும் தமிழக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் மகத்தான வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்று கூறினார்.

பல்வேறு மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 91,308 பேர் அ.தி.மு.க.வில் இணையும் பிரம்மாண்டமான விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்க முதல்வர் ஜெயலலிதா நேற்று காலை 11 மணிக்கு வந்தார். அவரை ராயப்பேட்டையில் தென்சென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.பி.கலைராஜன் ஆயிரக்கணக்கானோருடன் திரண்டு நின்று வரவேற்றார். அதே போல் ஏராளமான மகளிர் அணியினர் சாலைகளில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். மேலும் செண்டை மேளம், பேண்டு வாத்தியம் மற்றும் மங்கள வாத்திய இசையுடன் முதல்வர் ஜெயலலிதாவை உற்சாகம் பொங்க வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க, பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட், த.மா.கா., ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளை சேர்ந்தவர்களும் பல்வேறு அமைப்புகளில் பணியாற்றி வந்தவர்களும், கல்லூரி மாணவ, மாணவிகளும் என  மொத்தம் 91,308 பேர் அ.தி.மு.க.வில்  இணைந்தனர்.

சென்னை மாவட்டம், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் புறநகர், நாமக்கல், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், திருப்பூர் புறநகர், கோவை புறநகர், நீலகிரி, திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை மாநகர், மதுரை புறநகர், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் – 2 பேர், நகர மன்றத் தலைவர் – 1 பேர், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர்கள் – 2 பேர், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்கள் – 2 பேர்,  மாமன்ற உறுப்பினர்கள் – 2 பேர், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் – 16 பேர், நகர மன்ற வார்டு உறுப்பினர்கள் – 19 பேர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் – 12 பேர், ஊராட்சி மன்றத் தலைவர்கள் – 27 பேர் உட்பட பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் என, 10,000 மகளிர் உள்ளிட்ட 91,308 பேர் தங்களை அ.தி.மு.க.வில்  அடிப்படை உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த விழாவில் மாற்றுக்கட்சிகளில் இருந்து அ.தி.மு.கவில் தங்களை இணைத்து கொண்ட தொண்டர்களை வரவேற்று முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார். அப்போது அவர் பேசியதாவது.,

கடந்த காலங்களில் தி.மு.க, பா.ஜ.க., காங்கிரஸ், தேமுதிக,  பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட், த.மா.கா., மதி.மு.க, விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலும், இன்ன பிற அமைப்புகளிலும் பணியாற்றி வந்த 91,308 பேர் இன்று முதல் அ.தி.மு.க  அடிப்படை உறுப்பினர்களாக இணைந்துள்ளீர்கள்.  உங்கள் அனைவரையும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்ற முறையில் அன்போடு வரவேற்று மகிழ்கிறேன். 

தமிழக மக்களின் பேரன்பைப் பெற்ற, உன்னதமான அரசியல் இயக்கமாகிய அ.தி.மு.க.வில் இணைந்து, பொது வாழ்வைத் தொடர இங்கு பல்லாயிரக்கணக்கில் திரண்டிருக்கும் உங்களுக்கு, அ.தி.மு.க. ஒரு மாபெரும் அரசியல் பயிற்சிக் களமாகத் திகழும் என்ற உறுதியை நான் அளிக்கிறேன்.  தமிழ்நாட்டில் எனது தலைமையிலான அ.தி.மு.க அரசு ஆற்றி வரும் மகத்தான மக்கள் நலப் பணிகளைக் கண்டு அவற்றால் பயன்பெற்று, தொடர்ந்து ஏராளமானோர் அ.தி.மு.க.வில் இணைந்த வண்ணம் உள்ளனர். இந்தப் பணிகள் நமது மாநிலத்தைத் தாண்டி, இன்றைக்கு இந்த நாடு முழுவதும் பேசப்படுகின்ற சிறப்புக்குரிய பணிகளாக அமைந்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். 

அண்மையில் வட இந்தியாவில், ஒரு மாநிலத்தில் தமிழகத்தின் அம்மா உணவகத்தைப் போல அங்கும் உணவகங்கள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் செய்திகளை பத்திரிகைகளில் நீங்கள் படித்திருப்பீர்கள். உங்களுக்கெல்லாம் நன்கு தெரியும். ஏற்கெனவே வெளிநாடுகளில் இருந்து வந்து நமது அம்மா உணவகங்களின் சிறப்பினைப் பார்த்து பாராட்டி தங்கள் நாடுகளிலும் அது போலத் தொடங்க பார்வையாளர்கள் வந்து சென்றனர். இது ஓர் எடுத்துக்காட்டு தான். 

இது போலவே, எண்ணற்ற எனது மக்கள் நலப் பணிகளை நாடு முழுவதும், ஏன் பிற நாடுகளிலும் கூட பின்பற்றத் தொடங்கி இருக்கிறார்கள் என்பது எனக்கு மட்டுமல்ல, உங்கள் எல்லோருக்குமே மகிழ்ச்சி அளிக்கின்ற செய்தியாகும். மக்களுக்காகவே வாழும் நான், இன்னும் ஏராளமான மக்கள் நலப் பணிகளை செய்து முடித்திட ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். என்னுடைய தலைமையின் கீழ் இணைந்து பணியாற்ற வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்போடு கழகத்தில் இணைத்துக் கொள்வதோடு, அடுத்து வரும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் நீங்கள் அனைவரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகத்தான வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.  மக்களுக்காக உழைக்கும் ஒவ்வொருவருக்கும் பொதுவாழ்வில் பெரும் எதிர்காலம் உண்டு.  அந்த வாய்ப்புகளை உரிய நேரத்தில் உண்மையான தொண்டர்களுக்கு அளிப்பதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நிகரான இயக்கம் வேறு எதுவும் இல்லை. எனவே, நீங்கள் அனைவரும் மக்கள் பணிகளை சிறப்புடன் ஆற்றி, உங்கள் அரசியல் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற்றிட, உங்கள் எல்லோருக்கும் எனது மனப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, செல்லூர் கே.ராஜூ, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், காமராஜ், ஒ.எஸ்.மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், ஜெயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி, எம்.சி.சம்பத், பென்ஜமின் உள்ளிட்டோரும் மாவட்ட செயலாளர்கள் வி.பி.கலைராஜன், விருகை ரவி, பாலகங்கா ஆகியோரும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.