உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு : கடைசி நாளில் அ தி.மு.க.வில் விருப்ப மனுக்கள் குவிந்தன

உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு : கடைசி நாளில் அ தி.மு.க.வில் விருப்ப மனுக்கள் குவிந்தன

வெள்ளி, செப்டம்பர் 23,2016,

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் வியாழக்கிழமையுடன் (செப். 22) முடிவடைந்தது. கடைசி நாள் என்பதால், கட்சியினர் அதிக ஆர்வத்துடன் விருப்ப மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து அளித்தனர்.

உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் கடந்த 16-ஆம் தேதி முதல் பெறப்பட்டு வந்தன. ஒரு மாவட்டத்திற்கு ஒரு இடம் வீதம் தமிழகம் முழுவதும் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டன.
சென்னையில் 4 மாவட்டங்கள் உள்ளன. 4 மாவட்டங்களிலும் தனித்தனியாக விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டன. 4 பக்கங்கள் கொண்ட விண்ணப்ப மனுவில், பெயர், போட்டியிட விரும்பும் பதவி, மாவட்டம், எந்த ஊராட்சி ஒன்றியம், மாநகராட்சி வார்டு என்ற விவரங்கள் கேட்கப்பட்டிருந்தன. போட்டியிட விரும்புபவரின் பெயர், கல்வித் தகுதி, கட்சியில் எந்த ஆண்டில் இருந்து உறுப்பினர், தற்போது வகிக்கும் பதவி, மொத்த வாக்காளர் எண்ணிக்கை, வெற்றி வாய்ப்பு, கட்சி வளர்ச்சிக்கு செய்த பணிகள், போராட்டங்களில் பங்கேற்றது உள்ளிட்ட 20 கேள்விகள் மனுவில் கேட்கப்பட்டிருந்தன.
விருப்ப மனு பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வியாழக்கிழமை கடைசி நாள் ஆகும். இரவு 8 மணி வரை விருப்ப மனுக்கள் பூர்த்தி செய்து அளிக்கப்பட்டன.
இறுதி நாள் என்பதால் அனைத்து இடங்களிலும் அதிமுகவினர் அதிகளவு மனுக்களை அளித்தனர். எத்தனை பேர் மனுக்களை அளித்தனர் என்பது குறித்த தகவல் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.