ஊழலையும் கருணாநிதியையும் பிரிக்க முடியாது : முதல்வர் ஜெயலலிதா கடும் தாக்கு

ஊழலையும் கருணாநிதியையும் பிரிக்க முடியாது : முதல்வர் ஜெயலலிதா கடும் தாக்கு

திங்கள் , மே 02,2016,

ஊழல் என்றாலே கருணாநிதி; கருணாநிதி என்றாலே ஊழல்’ , ஊழலையும் கருணாநிதியையும் பிரிக்க முடியாது என்று கோவை கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கடுமையாக தாக்கி பேசினார்.

தமிழ்நாடு சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, நேற்று கோவை `கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக, சென்னையில் இருந்து வான் வழியாகப் புறப்பட்டு கோவை சென்றடைந்த போது, கோவை மாநகர், கோவை புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பிலும், கேரள மாநிலக் கழகத்தின் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா பொதுக்கூட்ட மேடை நோக்கிச் சென்ற போது, சாலையின் இரு மருங்கிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து கழகக் கொடியையும், கழகத்தின் வெற்றிச் சின்னமாம் `இரட்டை இலை’ சின்னத்தையும்; அதே போல், தொழிலாளர்கள் தொழிற்சங்கக் கொடிகளையும் தங்கள் கைகளில் ஏந்தியும்; பெருந்திரளான மகளிர் பூரண கும்ப மரியாதை அளித்தும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

அதன் தொடர்ச்சியாக, பல்வேறு திருக்கோயில்களின் சார்பில் அளிக்கப்பட்ட பூரண கும்ப மரியாதையை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா, பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்ற போது, தம்மைக் காண்பதற்காகத் திரண்டிருந்த பல லட்சக்கணக்கான மக்களுக்கு கழகத்தின் வெற்றிச் சின்னமாம் `இரட்டை இலை’ சின்னத்தைக் காண்பித்து, கழக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி என்றாலே ஊழல் கூட்டணி என்பது தான் பொருள்.  நிலக்கரி ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் வீட்டுவசதி ஊழல் என பல்வேறு ஊழல்களைச் செய்து மக்களால் தண்டிக்கப்பட்ட கூட்டணி காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி. காமன்வெல்த் விளையாட்டிலே கூட விளையாடியவர்கள் என்றால் அந்தக் கூட்டணி எப்படிப்பட்ட ஊழல் கூட்டணி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி, மத்தியில் பதவியில் இருந்த போது இத்தாலியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடமிருந்து  ஹெலிகாப்டர்கள் வாங்குவதில் ஊழல் நடைபெற்றது பற்றி தற்போது ஊடகங்களில் வெளி வந்துள்ளது. இப்படித் தான்  எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என ஊழல் ஆட்சியையே திமுக-வும், காங்கிரஸும் சேர்ந்து மத்தியிலும் மாநிலத்திலும் நடத்தி வந்தனர். ஆனால் கருணாநிதியும், திமுக-வினரும் தற்போது உத்தமர் போல் பேசி மக்களை ஏமாற்றி விடலாம் என பகல் கனவு காண்கின்றனர்.  இவர்களது ஊழல் பற்றி அனைத்தும் தெரிந்த தமிழக மக்களிடம் இவர்களது மாய்மாலம் எதுவும் எடுபடாது.  இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி  கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சி தான்.

விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் வல்லவர் கருணாநிதி
“விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் வல்லவர்” என்ற பட்டத்தை நீதியரசர் சர்க்காரியாவிடமிருந்து அந்தக் காலத்திலேயே பெற்றவர் தான் கருணாநிதி. வீராணம் ஊழல், பூச்சிக்கொல்லி மருந்து ஊழல், மஸ்டர் ரோல் ஊழல், நில அபகரிப்புகள், மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல் என அனைத்திலும் பரந்து விரிந்து ஊழல் இருந்தது திமுக ஆட்சியில் தான்.

1 லட்சத்தி 76,000 கோடி இழப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற இமாலய ஊழலை  புரிந்தது திமுக-வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்.  இந்த ஊழல் பற்றி எல்லோருக்கும் தெரியும்.  ஆனால்  இதைப் பற்றி கருணாநிதி என்ன சொன்னார்?  காங்கிரஸ் கட்சி தங்களை பழி வாங்குகிறது என்றார் கருணாநிதி.  காங்கிரஸ் எதற்காக திமுக-வை பழி வாங்க வேண்டும்? பழி வாங்குகிறது என்றால் காங்கிரஸுக்கான உரிய பங்கு கொடுக்கப்படவில்லை என பொருள் கொள்ளலாமா? அப்படி பழி வாங்கிய காங்கிரஸுடன் தற்போது எதற்காக திமுக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது?  இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற வகையில் ஏழை மக்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக தொலைதொடர்பு துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியதாக அந்த மத்திய அமைச்சரும், கருணாநிதியும் கூறியுள்ளனர்.  எந்த ஏழை மக்கள் பயனடைய இவர்கள் புரட்சியை ஏற்படுத்தினார்கள்? கருணாநிதியும் அவர் குடும்பமும் என்ற ஏழை மக்களுக்கா?  

`ஊழல் என்றாலே கருணாநிதி; கருணாநிதி என்றாலே ஊழல்’ என்று சொல்லும் அளவுக்கு ஊழலுடன் பின்னிப் பிணைந்துள்ள கருணாநிதி, ஊழலற்ற ஆட்சி வழங்குவாராம்!  இதை கேட்பவர்கள் என்ன ஏமாளிகளா? ஊழலையே தொழிலாகக் கொண்டுள்ள திமுக-காங்கிரஸ் கூட்டணி வாக்கு சேகரிக்க உங்களைத் தேடி வரும் போது அவர்களது ஊழல்களை எடுத்துச் சொல்லி அவர்களை விரட்டி அடியுங்கள்.  செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்
இப்பொழுது பல அரசியல் கட்சித் தலைவர்களும் மதுவிலக்கு பற்றி பேசி வருகிறார்கள்.  எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன், மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும்.  முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும்.  கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்.  பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும். குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான  மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் லட்சியத்தை நாம் அடைவோம்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் மதுவிலக்குக்கு சட்டம் கொண்டு வருவோம் என்றும், அரசு மதுபான விற்பனையிலிருந்து விலகும் என்றும் சொன்னது பற்றி நான் கேள்வி கேட்டதும், கருணாநிதி ஒரு கூட்டத்தில் முதல் கையெழுத்தே மதுவிலக்குக்குத் தான் என்று  ஒரு வெற்று வாக்குறுதியை அளித்தார். அதை மாற்றி தஞ்சாவூர் கூட்டத்தில் ஒரே நாளில் சட்டம் இயற்றுவோம் என மீண்டும் சொல்லியுள்ளார். அதே கூட்டத்தில் மதுவிலக்கு என்றால் மதுக்கடைக்கு யாரும் செல்லக் கூடாது. மதுக்கடைக்கு செல்கின்றவர்களை தீண்டத் தகாதவர்களாக பார்க்க வேண்டும் என ஒரு புதிய விளக்கத்தையும் கொடுத்துள்ளார். இப்படி முன்னுக்குப் பின் முரணாக கருணாநிதி பேசுவதிலிருந்து ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது.  மதுவிலக்குக் கொள்கையில் திமுக-வுக்கு எந்தவித அக்கறையும் இல்லை. மதுவிலக்கைப் பயன்படுத்தி வாக்குகளைப் பெற முடியுமா என்று தான் மதுவிலக்குப் பற்றி அவர்கள் பேசி வருகிறார்கள்.   இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.