எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க படும் : மாஃபா பாண்டியராஜன்

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க படும் : மாஃபா பாண்டியராஜன்

ஜூன் 06, 2017,செவ்வாய் கிழமை,

திருத்தணி : பெரும்பான்மையை நிரூபிக்கும் நிலைவந்தால் முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த எம்எல்ஏ மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக 95 எம்எல்ஏக்கள் இருப்பதாகவும், ஓபிஎஸ் அணியில் 11 எம்எல்ஏக்கள் இருப்பதாகவும், தினகரனுக்கு ஆதரவாக 25-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் குரல் கொடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி அதிமுக எம்எல்ஏக் கள் 3 அணிகளாக பிரிந்து இருப்பதால் முதல்வர் கே.பழனிசாமியின் அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மாஃபா பாண்டியராஜன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ”ஆட்சிக்கு பங்கம் வந்தால் பாண்டியராஜன் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ-க்கள் கூட இவர்கள் (இபிஎஸ் அணியினர்) பக்கம் வாக்களிப்பார்கள்” என்று வேறொருவர் தெரிவித்த கருத்தை பகிர்ந்திருந்தார்.

இதுதொடர்பாக திருத்தணியில் மாஃபா பாண்டியராஜன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ”பெரும்பான்மையை நிரூபிக்கும் நிலை வந்தால் முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.