எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.15 கோடி இடைக்கால நிவாரணம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.15 கோடி இடைக்கால நிவாரணம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சனிக்கிழமை, பிப்ரவரி 25, 2017,

சென்னை : எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வீதம் ரூ.15 கோடி நிவாரணமாக வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் கடலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 15 கோடி ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே நடுக்கடலில் 2 சரக்கு கப்பல் மோதிக்கொண்ட விபத்தில், கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் சேதமடைந்தது. டான் காஞ்சிபுரம் என்ற கப்பலில் இருந்து கசிந்த கச்சா எண்ணெய், எண்ணூர் முதல் திருவான்மியூர் கடற்கரை வரை பரவியது. இதனால், மீனவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சா எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 15 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். எண்ணெய் கசிவால் வாழ்வாதாரம் இழந்த 30 ஆயிரம் மீனவர் குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்றும், 75 லட்சம் ரூபாய் செலவில் எர்ணாவூர், நொச்சிக்குப்பம் பகுதிகளில் மீன் சந்தைகள் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.