‘எம்.ஜி.ஆர்-அம்மா- தீபா பேரவை’ என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கினார் ஜெ.தீபா

‘எம்.ஜி.ஆர்-அம்மா- தீபா பேரவை’ என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கினார் ஜெ.தீபா

சனிக்கிழமை, பிப்ரவரி 25, 2017,

சென்னை  : எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற புதிய அமைப்பை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொடங்கினார்.மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் நான் போட்டியிடவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் நேற்று எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையைத் தொடங்கி வைத்து ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பேசியதாவது:-

தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று இந்தப் பேரவை தொடங்கப்பட்டுள்ளது. பேரவையின் பொருளாளராக நான் செயல்படுவேன். இது கட்சியல்ல; அமைப்புதான். தற்போதைக்கு பேரவையாகச் செயல்படும்; பின்னர் அடுத்தகட்ட முடிவை அறிவிப்போம்.ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு நானே. எனது அரசியல் பயணம் இன்று முதல் தொடங்கியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை அவரிடத்திலிருந்து தொடங்குவேன். இரட்டை இலை சின்னத்தை மீட்பதே தமது பேரவையின் குறிக்கோள்.ஏழை, எளிய மக்களின் துயர் துடைக்கும் பாதையில் எங்களது செயல்பாடுகள் அமையும்.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் ஆசியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம். தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.

தற்போதைய அரசியல் சூழலில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. ஒரு துரோக கூட்டத்தின் பிடியில் தமிழக மக்கள் உள்ளனர். சசிகலா, அவருடைய குடும்பத்தினரைத் தவிர்த்து மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்?எனது சகோதரர் தீபக் வியாழக்கிழமை வெளியிட்ட திடீர் அறிவிப்புகளின் பின்னணியில் ஏதோ தெளிவில்லாத நிலை உள்ளது. அவருடைய நிலைப்பாடு தெளிவற்ற நிலையில் உள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்துடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. பன்னீர்செல்வமும் நானும் தனித்தனியாக மக்கள் பணியாற்றி வருகிறோம். அரசியல், தேர்தலில் ஓ.பி.எஸ்-ஸýடன் இணைவது குறித்து முடிவு செய்யவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் ரூ.100 கோடி அபராதம் கட்டுவது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை என்றார் அவர். 

மக்களுக்காக இதுவரை எந்தவித சமூகப் பணியையும் ஆற்றாத நீங்கள், குடும்பப் பின்னணியை மட்டும் வைத்துக்கொண்டு அரசியல் பிரவேசம் செய்வது சந்தர்ப்பவாதமாக அமையாதா என்ற கேள்விக்கு பதிலளித்த தீபா, “மக்கள் பணி என்பது அவரவர்களாகவே கையிலே எடுத்துக்கொள்ளக்கூடாது; மக்கள் விரும்ப வேண்டும். அப்படி, தானாகவே மக்கள் பணியை கையில் எடுத்துக்கொண்டவர்தான் சசிகலா. மக்களுக்காக சசிகலா இதுவரை என்ன பணியாற்றியிருக்கிறார் என அவரிடம் கேள்வி எழுப்ப வேண்டும். நானோ தமிழக மக்களுக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணிக்க விரும்புகிறேன்’ எனப் பதிலளித்தார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தாம் போட்டியிடுவது உறுதி என்று தீபா கூறினார். ஓபிஎஸ் அணியினர் இந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் நானும் போட்டியிடுவேன் என்றார் அவர்.உள்ளாட்சி தேர்தலிலும் “எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’ சார்பில் போட்டியிடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.