எம்.ஜி.ஆர்.ருக்கு நாணயம்-அஞ்சல் தலை வெளியிட வேண்டும் ; பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

எம்.ஜி.ஆர்.ருக்கு  நாணயம்-அஞ்சல் தலை வெளியிட வேண்டும் ;  பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சனி,ஜனவரி 7,2017,

அதிமுக நிறுவனரும், மறைந்த முதல்வருமான எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவையொட்டி, அவருக்கு சிறப்பு அஞ்சல் தலை, நாணயம் வெளியிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

எம்.ஜி.ஆர். மக்களிடையே மிகுந்த செல்வாக்கும், வசீகரமும் பெற்ற தலைவர். அவர் தொடங்கிய புதுமையான திட்டங்களும், நலத் திட்டங்களும் நாடு முழுவதும் பின்பற்றப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் எம்.ஜி.ஆர். தொடங்கிய சத்துணவுத் திட்டம், உச்சநீதிமன்றத்தின் பாராட்டைப் பெற்றதோடு, அனைத்து மாநிலங்களும் பின்பற்றுமாறு உத்தரவிடப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தின் சமூக, பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த எம்.ஜி.ஆர். அடித்தளம் அமைத்தார். அவரது சேவையைப் பாராட்டும் வகையில் பாரத ரத்னா விருதையும் மத்திய அரசு வழங்கி கௌரவித்தது.

உலகத் தமிழர்களுக்கு ஊக்க சக்தியான எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை, கொடை உள்ளம், அசைக்க முடியாத தலைமைப் பண்பு, மாநில உரிமைகளைப் பெறுவதில் காட்டிய உறுதி ஆகியன மறக்க முடியாதவை. தமிழர்களின் இதயங்களில் நிரந்தரமாக வீற்றிருக்கும் அவருக்கு நினைவு நாணயமும், சிறப்பு அஞ்சல் தலையும் வெளியிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். இதை உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் அனைத்துத் தரப்பினரும் வரவேற்பார்கள்.
மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இதற்கு தேவையான அனைத்து விவரங்களையும் உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி 17-இல் தொடங்கவிருக்கும் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவையொட்டி, இதற்கான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிட வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

இதே போல் அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா, அதிமுக நிறுவனரும், மறைந்த முதல்வருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது உருவம் பதித்த நாணயத்தையும், அஞ்சல் தலையையும் மத்திய அரசு வெளியிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார்.