எம்.ஜி.ஆர். 28-வது நினைவுநாள்: முதல்வர் ஜெயலலிதா மலர்தூவி அஞ்சலி- அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க உறுதி மொழி

எம்.ஜி.ஆர். 28-வது நினைவுநாள்: முதல்வர் ஜெயலலிதா மலர்தூவி அஞ்சலி- அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க உறுதி மொழி

வியாழக்கிழமை, டிசம்பர் 24,

முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 28வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது, அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்பிக்களும் மரியாதை செலுத்தினர்.அதன் பிறகு எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அ.தி.மு.க.வினர் உறுதிமொழியை ஏற்றனர். அதில் கூறி இருப்பதாவது:–
இதய தெய்வம் எம்.ஜி.ஆரின் ஆணைக்கு இணங்க, அ.தி.மு.க. தலைமைப் பொறுப்பினை ஏற்று, 7ஆவது முறையாக, கழகத்தின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும், முதல்–அமைச்சர், அம்மாவின் வழி நின்று, கழகத்தின் கண்ணியத்தையும், மாண்பையும் கட்டிக்காக்கும் வகையில், கட்டுப்பாட்டோடு அரசியல் பணியாற்றிட, உளமாற உறுதி ஏற்கிறோம்.

‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்று தனது வாழ்வையே, தமிழக மக்களுக்காகவும், இந்தியத் திருநாட்டிற்காகவும் அர்ப்பணித்து, தமிழகத்தில், அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வண்ணம், பல்வேறு திட்டங்களைத் தீட்டி, முனைப்புடன் செயல்படுத்தி வரும், முதல்–அமைச்சர், அம்மாவுடைய தியாக வாழ்வின் சிறப்புகளை மக்களுக்கு தொடர்ந்து எடுத்துரைக்க, உளமாற உறுதி ஏற்கிறோம்.

காவேரி நதிநீர்ப் பங்கீடு; முல்லைப் பெரியாறு அணையில் தமிழர்களின் உரிமை; தமிழக மீனவர் நலன் காத்தல் உள்ளிட்ட தமிழக மக்களின் அடிப்படை வாழ்வாதார விவகாரங்களில், உறுதியாய் கொள்கை முடிவுகளை எடுத்து, அவற்றில் வெற்றி வாகை சூடிய, முதல்–அமைச்சர் அம்மாவின், தமிழர் நலன் காக்கும் உரிமைப் போராட்டத்தின் வெற்றிகளை, மக்களுக்கு எடுத்துக் கூறிட, உளமாற உறுதி ஏற்கிறோம்.

தலைநகர் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெய்த கடும் மழையாலும், அதன் தொடர்ச்சியான வெள்ளப் பெருக்காலும் பாதிக்கப்பட்ட மக்களை, போர்க்கால அடிப்படையில் மீட்டெடுத்து, அனைவருக்கும் தாய் உள்ளத்தோடு ஏராளமான நிவாரண உதவிகளை வழங்கி வரும், மக்கள் மீது கொண்டிருக்கும் பேரன்பை, அனைவருக்கும் எடுத்துரைக்க, உளமாற உறுதி ஏற்கிறோம்.

இயற்கைப் பேரிடரால், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும், இழப்புகளை சரிசெய்து, மீண்டும் இயல்பு நிலையிலும், முன்னேற்றப் பாதையிலும், தமிழகம் நடைபோட்டிட, அம்மாவின் மதிநுட்பமும், நிகரற்ற ஆற்றலும் மிக்க தலைமையினால் தான் இயலும் என்பதை, தமிழக மக்களுக்கு விளக்கிக் கூறிட, உளமாற உறுதி ஏற்கிறோம்.

மக்களுக்கு ஏற்படுகின்ற இன்னல்களை, தங்களுடைய அரசியல் முதலீடுகளாக மாற்றிக்கொள்ள முயற்சித்து, பொய்ப் பிரச்சாரங்களால் அரசியல் மறுவாழ்வு பெற முயற்சிப்பதை வாடிக்கையாகக் கொண்ட, எதிர்மறை அரசியல் சக்திகளின் முயற்சிகளை முறியடித்து, அம்மாவுடைய ஆட்சியின் சாதனைகளை, மக்களுக்கு எடுத்துக் கூறிட, உளமாற உறுதி ஏற்கிறோம்.

விலையில்லா அரிசி; குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள்; மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட எண்ணற்ற கல்வி உபகரணங்கள்; ஏழைக் குடும்பங்களுக்கு விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள்; தாலிக்கு தங்கத்துடன் திருமண நிதியுதவி; விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி; ஏழை, எளியோருக்கு பசுமை வீடுகள் என்று, எல்லோரும் எல்லாமும் பெற்றிட, அம்மாவின் சாதனைகளால், தமிழகம் பெற்றிருக்கும் வளர்ச்சியைப் பற்றி, மக்களுக்கு நாள்தோறும் எடுத்துக்கூறிட, உளமாற உறுதி ஏற்கிறோம்.

தமிழகத்தில் இருள் பரப்பிய தீய சக்தியின் ஆட்சியை தூக்கி எறிந்து, மின்மிகையால் ஒளிரும் மாநிலமாக மாற்றியதோடு, சர்வதேச முதலீட்டாளர்கள் பலரும் தமிழ் நாட்டில் முதலீடு செய்து, தமிழகம் வளம் பெறுவதற்கு திட்டமிட்டு உழைத்து, தொழில் வளர்ச்சிக்கும், புதிய வேலை வாய்ப்புகளுக்கும் வழி அமைத்து, சரித்திரம் பேசும் சாதனைகளைப் படைத்திருக்கும், அம்மாவின் சாதனைகளை தமிழக மக்களுக்கு எடுத்துரைக்க, உளமாற உறுதி ஏற்கிறோம்.

விரைவில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில், அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று, எம்.ஜி.ஆரின் நல்லாசியோடு, கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், முதல்–அமைச்சர் அம்மாவின் தலைமையில் தொடர்ந்து நல்லாட்சி அமைந்திட, முழு அர்ப்பணிப்போடு களப்பணியாற்றுவோம் என்று இந்நாளில் உளமாற உறுதி ஏற்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் அதிமுக உறுப்பினர்கள் சென்னை வந்திருந்தனர்.