ஏழை மாணவியின் படிப்புக்கான முழு செலவும் வழங்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,மாணவியின் குடும்பத்தார் நன்றி : முதலமைச்சர்தான் தங்கள் குலதெய்வம் என உருக்கம்

ஏழை மாணவியின் படிப்புக்கான முழு செலவும் வழங்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,மாணவியின் குடும்பத்தார் நன்றி : முதலமைச்சர்தான் தங்கள் குலதெய்வம் என உருக்கம்

ஞாயிறு, ஜூன் 26,2016,

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பிரியதர்ஷினியின் ஏழ்மை நிலை அறிந்து, மருத்துவப் படிப்புக்கான முழு செலவும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையிலிருந்து வழங்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மாணவியின் குடும்பத்தார் நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்துள்ளனர்.

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற மருத்துவக் கல்வி பயில்வதற்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று, சென்னை கே.கே. நகரில் உள்ள E.S.I. மருத்துவக் கல்லூரியில் M.B.B.S., படிப்பதற்கு இடம் கிடைத்துள்ள, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா கண்ணக்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்த மாணவி பிரியதர்ஷினி, தனது குடும்பம் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருவதாகவும், தந்தை கூலி வேலை செய்து வருவதாகவும் தெரிவித்து, தனது மருத்துவப் படிப்புக்கு நிதியுதவி வழங்க வேண்டி அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

எந்த ஒரு மாணவ, மாணவியும் கல்வி பயில்வதற்கு நிதி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற தொலைநோக்கு சிந்தனையுடைய அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, பிரியதர்ஷினியின் வேண்டுகோளை தாயுள்ளத்தோடு பரிசீலித்து, அந்த மாணவியின் மருத்துவப் படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டு, முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்புக்கான கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம், புத்தகக் கட்டணம் உட்பட மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய், “புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை”-யில் இருந்து வழங்கப்படும் என உத்தரவிட்டிருந்தார்.

ஏழ்மை நிலை அறிந்து, மருத்துவப் படிப்புக்கான முழு செலவும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையிலிருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மாணவியின் குடும்பத்தார் நெஞ்சம் நெகிழ நன்றி தெவித்துள்ளதோடு, முதலமைச்சர்தான் தங்கள் குலதெய்வம் எனவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளனர்.