ஏழை மாணவி பிரியதர்ஷினிக்கு மருத்துவ கல்வி பயில ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வழங்கி முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

ஏழை மாணவி பிரியதர்ஷினிக்கு மருத்துவ கல்வி பயில ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வழங்கி முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

புதன், ஜூன் 29,2016,

சென்னை:திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பிரியதர்ஷினியின் ஏழ்மை நிலையை அறிந்து, மருத்துவப் படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டு, முதலாம் ஆண்டு கட்டணமாக 1,10,000/- ரூபாயை மாணவியின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா, கண்ணக்குறுக்கை கிராமத்தைச்சேர்ந்த பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவி பிரியதர்ஷினி, சென்னை, கே.கே. நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு இடம் கிடைத்தும், கல்லூரிக் கட்டணம் செலுத்த முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வருவதாக, தமது குடும்பத்தின் ஏழ்மை நிலையை விளக்கி, மருத்துவப் படிப்புக்கு நிதியுதவி கோரி அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மாணவி பிரியதர்ஷினியின் வேண்டுகோளை கனிவுடன் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவப் படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக் கொண்டதோடு, முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்புக் கட்டணமாக 1,10,000/- ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில் மாணவி பிரியதர்ஷினி மற்றும் அவருடைய குடும்பத்தினரை நேரில் வரவழைத்து எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து, முதலாம் ஆண்டு கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம், புத்தகக் கட்டணம் உட்பட மொத்தம் 1,10,000/- ரூபாய்க்கான வரைவோலையை வழங்கி, மருத்துவப் படிப்பில் சிறந்து விளங்க தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

மருத்துவக் கல்வி பயில்வதற்கான நிதியுதவியினைப் பெற்றுக்கொண்ட மாணவி பிரியதர்ஷினி மற்றும் அவரது குடும்பத்தினர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியினை கண்ணீர் மல்க தெரிவித்துக்கொண்டனர்.