ஐல்லிக்கட்டை சட்டபூர்வமாக நடத்த முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து முயற்சி:அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

ஐல்லிக்கட்டை சட்டபூர்வமாக நடத்த முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து முயற்சி:அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

வெள்ளி, ஜனவரி 22,2016,

சென்னை : தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டை நடத்த சட்டபூர்வமாக நடத்த முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக சட்டசபையில் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர் செல்வம் கூறினார். ஜல்லிக்கட்டு பற்றி பேச தி.மு.க.வுக்கோ, காங்கிரசுக்கோ அருகதை கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் எழுந்து ஜல்லிக்கட்டு பிரச்னை தொடர்பாக பேச முற்பட்டார். அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி தரவில்லை. கவர்னர் உரை மீதான விவாதம் நடைபெறுகிறது. எனவே அந்த விவாதத்தின்போது உங்கள் கட்சி உறுப்பினர் பேசும்போது, இதுப்பற்றி பேசலாம் என்று சபாநாயகர் கூறினார். அதனை ஏற்காத தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்கள். இதனை தொடர்ந்து சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட்), குணசேகரன் (கம்யூனிஸ்ட்), விஜயதரணி (காங்கிரஸ்), கணேஷ்குமார் (பா.ம.க.) ஆகியோர் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் கூறினார்கள். ஜவாஹிருல்லாஹ் (மனித நேய மக்கள் கட்சி) பேசும்போது, ஜல்லிக்கட்டு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது பதிலளித்து அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு பற்றி பேச தி.மு.க.விற்கோ, காங்கிரசுக்கோ எந்தவித அருகதையும் இல்லை. ஜல்லிக்கட்டு பிரச்சினையில் முதல்வர் அம்மா சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதல்வர் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் என்பது அனைவருக்குமே தெரியும். இந்த பிரச்னையை தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா சட்ட பூர்வமாக அணுகுவார் என்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு பற்றி திமுக.வினர் அடிக்கடி பேசிக்கொண்டிருக்கிறார்கள். திருடன் திருடிக்கொண்டு மற்றவர்களை திருடன் என்று அழைப்பதை போல திமுகவினர் ஜல்லிக்கட்டு பற்றி கூறிக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் காளைகளை அடக்க இளங்காளைகள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளும் காளைகளும் காட்சிப்பட்டியலில் இடம் பெறக்கூடாது என்று சட்டம் கொண்டு வந்தது. மத்தியில் இருந்த திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான். ஆனால் இங்கே திமுக.வினர், பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் செயலை செய்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு பேச எந்த அருகதையும் இல்லை என்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.