ஐஸ் தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்து பலியானவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவு

ஐஸ் தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்து பலியானவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவு

வெள்ளி, டிசம்பர் 16,2016,

ராமநாதபுரம் மாவட்டத்தில், ஐஸ் தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்க முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை கிராமத்தில் இயங்கிவரும் தனியார் ஐஸ் தொழிற்சாலையில் 13–ந் தேதியன்று அமோனியம் குளோரைட் உருளையில் கசிவு ஏற்பட்டு வெடித்ததில், தொழிற்சாலையில் பணியிலிருந்த மின் பணியாளர் கண்ணன் மற்றும் அருகிலுள்ள கடைகளில் நின்றுகொண்டிருந்த ஆறு நபர்கள் மூச்சு திணறி மயக்கம் அடைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த கணேசனின் மகன் பச்சைமுத்துவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதில், மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் உயிர் இழந்தார்.
இந்த செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் அகால மரணமடைந்த பச்சைமுத்து குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விபத்தில் மயக்கமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆறு நபர்களுக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளித்திட மருத்துவமனை அதிகாரிகளுக்கும், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த பச்சைமுத்துவின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன்.என்று அதில் கூறப்பட்டுள்ளது.