ஒட்டுமொத்த மாநிலத்தின் உரிமைக்காக குரல் கொடுத்த ஒரே தலைவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா : அரசியல் தலைவர்கள் புகழாரம்

ஒட்டுமொத்த மாநிலத்தின் உரிமைக்காக குரல் கொடுத்த ஒரே தலைவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா : அரசியல் தலைவர்கள்  புகழாரம்

வெள்ளி,ஜனவரி 6,2017,

ஒட்டுமொத்த மாநிலத்தின் உரிமைக்காக குரல் கொடுத்த ஒப்பற்ற ஒரே தலைவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவேந்தல் நிகழ்ச்சி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சன்மார்க்க செம்பொருட்டுணிவு உயராய்வு இருக்கை, திருமூலர் ஆய்விருக்கை, அம்மா அறக்கட்டளை ஆகியவை சார்பாக நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூறிய கருத்துகள்:

பழ. நெடுமாறன்: பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு பெற மத்திய அரசுடன் போராடி அதை நிலைநிறுத்தியவர் ஜெயலலிதா. ஈழத்தமிழர் பிரச்னை, காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு என மாநிலத்தின் ஒட்டுமொத்த பிரச்னைக்கும் குரல் கொடுத்த ஒப்பற்ற ஒரே தலைவராக இருந்தார்.
தா.பாண்டியன்: மிகச் சிறந்த ஆளுமை மிக்க பெண் தலைவர்களின் பட்டியலில் ஜெயலலிதாவுக்கு தனி இடம் உள்ளது. பெற்ற தாய்கூட தூக்கி எறிந்த குழந்தைகளை காப்பதற்காக தொட்டில் குழந்தை திட்டத்தை ஏற்படுத்தி தாயுள்ளம் கொண்ட தலைவராக திகழ்ந்த ஜெயலலிதாவின் புகழ் என்றும் நிலைக்கும்.
தமிழிசை சௌந்தரராஜன்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து பலமுறை விமர்சித்திருக்கிறேன். அதே நேரத்தில் அவர் ஏழைகளுக்கு உதவியபோது பாராட்டியிருக்கிறேன். அரசியலில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அதன் மூலம் பல்வேறு சாதனைகளைப் படைத்தவர் ஜெயலலிதா.
தொல்.திருமாவளவன்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் சிலமுறை பேசியதிலேயே அவர் மீது வைத்திருந்த நன்மதிப்பு மேலும் உயர்ந்தது. பெண்கள் பொது வாழ்வில் ஆர்வமுடன் ஈடுபட தயங்கிய போதும் ஆண்களே அஞ்சி ஓடும் நேரத்திலும் அரசியலில் கால் பதித்து இரும்புப் பெண்மணி என்ற பெயரைப் பெற்றவர். அதிமுக கூட்டணியிலிருந்து நான் விலகியபோதுகூட, “தம்பி திருமாவளவன் எங்கிருந்தாலும் வாழ்க’ என்று ஒரு வரியில் பதிலளித்தார். “அரசியலில் அவசரப்படக் கூடாது; பொறுமை காக்க வேண்டும்’ என்று அன்று அவர் கூறியது எனது நெஞ்சில் ஆழமாக பதிந்து விட்டது என்றார் அவர்.
இதையடுத்து தமிழ் வளர்ச்சித்துறை இயக்கு கோ.விசயராகவன், பழந்தமிழர் காட்சிக்கூடத்தின் பொறுப்பாளர் முனைவர் மணவாளன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் ஆகியோர் உரையாற்றினர்.