ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்மா இ- கிராமம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்மா இ- கிராமம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஜூலை ,15 ,2017 ,சனிக்கிழமை,

சென்னை : தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஊர், அம்மா இ கிராமம் எனத் தேர்வு செய்யப்பட்டு அங்கு வைஃபை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் பல்வேறு துறைகளின் திட்டங்களை முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்தார். 49கோடியே 9 லட்சம் ரூபாய் செலவில் 150 கால்நடை மருத்துவ நிலையங்கள் கட்டப்படும். பால் உற்பத்தியாளர் சங்கப் பணியாளர்களுக்குக் கூடுதலாக மாதம் இருநூறு ரூபாய் வழங்கப்படும். நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறில் 28கோடியே 82 லட்ச ரூபாய் செலவில் புதிய மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்படும். கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியில் பழையாறு கடலில் சேருமிடத்தில் பத்துக்கோடி ரூபாய் செலவில் சூழலியல் பாதுகாப்புப் பூங்கா அமைக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் “அம்மா இ-கிராமம்” என ஒரு கிராமம் தெரிவு செய்யப்பட்டு, அந்த கிராமத்திற்கு, தகவல் தொழில்நுட்பவியல் வசதியினை கொண்ட கம்பியில்லா ஹாட்ஸ்பாட், திறன்மிகு தெரு விளக்குகள், தொலைக்கல்வி, தொலை மருத்துவம் போன்ற சேவைகள் வழங்கப்படும்.

இத்திட்டம் “தமிழ்நெட்” என்று அழைக்கப்படும். இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் போன்ற நிறுவனங்களிடம் இருந்தும், பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியிலும் செயல்படுத்தப்படும்.

பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ.40 ஆயிரத்திற்கு மிகாமலும், நகர்ப்புறங்களில் ரூ.60 ஆயிரத்துக்கு மிகாமலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினருக்கு விலையில்லா வீட்டுமனைகள், தையல் எந்திரங்கள் மற்றும் சலவைப்பெட்டிகள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் அதிக பயனாளிகள் பயனடையும் வகையில் தற்போது உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற பயனாளிகளின் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரமாக உயர்த்தப்படும். கிராமப்புற பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவியர்களின் பெற்றோரது ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்தார்.