ஓசூரில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

ஓசூரில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வியாழன் , ஜூலை 28,2016,

ஓசூரில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் உதவித் தொகை வழங்கி தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து இரங்கல் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் 26.7.2016 அன்று 14 செ.மீ அளவுக்கு பெய்த கன மழையின் காரணமாக மூக்காண்டப்பள்ளி அருகே ரயில்வே பாலத்தின் கீழ் மழை நீர் புகுந்ததால், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி வனிதா, மகள் தஷ்வினி மற்றும் கணேசன் என்பவரின் மகன் நந்தகுமார் ஆகியோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

கன மழையின் காரணமாக உயிரிழந்த இந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். கன மழையின் காரணமாக உயிரிழந்த வனிதா, தஷ்வினி மற்றும் நந்தகுமார் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.