ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது ; காவிரி பிரச்சினை குறித்து முக்கிய முடிவு

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது ; காவிரி பிரச்சினை குறித்து முக்கிய முடிவு

திங்கள் , அக்டோபர் 24,2016,

சென்னை ; நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது. இதில், காவிரி பிரச்சினை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, அவர் கவனித்து வந்த உள்துறை, பொதுத்துறை உள்ளிட்ட துறைகள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதலாக வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, கடந்த 19–ந் தேதி நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந் நிலையில், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மீண்டும் இன்று (திங்கட்கிழமை) அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர் மற்றும் முக்கிய துறைகளின் செயலாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

கூட்டத்தில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் செய்வது குறித்தும், காவிரி விவகாரம் குறித்தும், காவிரி தொழில்நுட்பக்குழுவின் ஆய்வறிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே மத்திய அரசு அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதுவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.