கச்சத்தீவு பிரச்சினைக்கு சட்டசபைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் : கருணாநிதிக்கு முதல்வர் ஜெயலலிதா சவால்

கச்சத்தீவு பிரச்சினைக்கு சட்டசபைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் : கருணாநிதிக்கு முதல்வர் ஜெயலலிதா சவால்

வெள்ளி, ஜூன் 24,2016,

சென்னை:கச்சத்தீவு பிரச்சனை தொடர்பாக பேச தொடங்கியதும் தி.மு.க.வினர் பதில் சொல்ல முடியாமல் ஓட்டமெடுத்து விட்டனர் என்று சட்டசபையில் ஆவேசமாக தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா, இதுதொடர்பாக,சட்டசபைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சவால் விட்டு முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

தமிழக சட்டபேரவையில் கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று பதிலளித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

1974-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த போது கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது பற்றியும், அதனைத் தடுக்க கருணாநிதி தவறி விட்டது பற்றியும் விரிவாக நான் இந்த மாமன்றத்தில் 20.6.2016 அன்று எடுத்துக் கூறினேன். 21.6.2016 அன்று கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கச்சத்தீவை தாரை வார்க்க தான் எந்த காலத்திலும் ஒப்புக் கொண்டதும் இல்லை, உடன்பட்டதும் இல்லை என்று தெரிவித்துள்ளார். 2013-ம் ஆண்டு மே மாதம் டெசோ அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு ஒன்றுதாக்கல் செய்யப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நான் கேட்கும் கேள்விகள் என்னவென்றால்,

1974-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி திடீரென்று அறிவிப்பு வந்தவுடன்தான் அது பற்றி தெரியும் என்று சொன்னதும், 15.4.2013 அன்று டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தி.மு.க அரசு வலியுறுத்தி தான் சிலஷரத்துகள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டன என்று கூறுவதும், ஒன்றுக்கொன்று முரண்பாடான தில்லையா? சில ஷரத்துகள் சேர்க்கும்படி சொல்லப்பட்டது என்றாலே, தாரை வார்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது தானே பொருள் ? என்று முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார். அப்போது தி.மு.க.வினர் எழுந்து நின்று கூச்சல் எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் ஜெயலலிதா நான் இந்த கேள்விகளை கருணாநிதியிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவர் பதில் சொல்லட்டும், நீங்கள் அமருங்கள். பதில் சொல்ல முடியவில்லை என்றால், கூச்சல் போடுவதா? பதில்சொல்ல முடியவில்லை என்றால், கூச்சல் போடுவதால் என்ன ஆகப்போகிறது?உங்கள் தலைவர் பதில் சொல்லட்டும். உங்கள் தலைவர், தலைவர் தானா? அல்லது இங்கே இருக்கின்ற எதிர்கட்சித் தலைவர் தான் உங்கள் தலைவரா? கூச்சல் போடுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. நான் கேட்கும் கேள்விகளைக் கேட்டே தீருவேன். எனக்குப் பேச அனுமதி தாருங்கள். அவர்களது தலைவர், தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்த அவையின் உறுப்பினர். அவர் இங்கே வந்து பதில் சொல்லி இருக்கலாம். அதைவிட்டுவிட்டு, வெளியே அறிக்கை கொடுத்து கொண்டிருக்கிறார். அந்தஅறிக்கையை பற்றி தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். உங்களால் முடியவில்லை என்றால் உட்காருங்கள். அறிக்கை கொடுத்தவரே இங்கே வந்து பதில் சொல்லட்டும். நீங்கள் உட்காருங்கள். இன்னும் சில நிமிடங்களில் எனது பதிலுரையை முடித்துவிடுவேன். அதன் பின்னர் அவர்கள் என்ன பேச விரும்பினாலும் தாங்கள் (சபாநாயகர்) அனுமதிக்கலாம். என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

ஆனால் தி.மு.க.வினர் அதை ஏற்காமல் ரகளையில் ஈடுபட்டப்படியே இருந்தனர். இதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால் முதல்வர் ஜெயலலிதாவே பெருந்தன்மையாக தெரிவித்திருக்கிறார். எனவே அமைதியாக முதல்வர் பேச்சை கேளுங்கள் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க உறுப்பினர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து பேசிய முதல்வர் ஜெயலலிதா கிட்டதட்ட ஒன்றரை மணிநேரம் இதுவரை எதிர்க்கட்சி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அமைதியாக அமர்ந்து எனது உரையைக் கேட்டார்கள். ஆனால் கச்சத்தீவு என்று சொன்னவுடனே அவர்களால் பதில் சொல்ல முடியாது என்பது தெரியும். கச்சத்தீவைப் பற்றி சில கேள்விகளை நான் எழுப்ப விரும்புகிறேன் என்று சொன்னவுடன் ஓட்டம் பிடித்துவிட்டார்கள். இதைத்தான் எதிர்பார்த்தேன். பதில் சொல்ல முடியவில்லை என்றால், கச்சத்தீவை பற்றி நான் பேசினால், முதலில் கூச்சல் போட வேண்டியது, அதன் பின்னர் அந்த கூச்சலால் இங்கே எதையும் தடை செய்ய முடியவில்லை என்றதும், ஓட்டம் பிடிக்க வேண்டியது.

கச்சத்தீவுபிரச்சினை பற்றி கடந்த 20-ம் தேதி அன்று நான் இங்கே சில கருத்துகளைத் தெரிவித்தேன். அதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்த அவைக்கு வெளியே ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். 21-ம் தேதி அன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கச்சத்தீவைப் பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அனைவருக்கும் நான் நினைவுபடுத்த விரும்புவது, கருணாநிதி இந்த அவையின் உறுப்பினர் ஆவார். சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவருக்கு இந்த அவைக்கு வருவதற்கு எல்லா உரிமையும் உண்டு.

அவர் இந்த அவைக்கு வந்திருக்கலாம். அவருடைய கருத்துகளைத் தெரிவித்திருக்கலாம். நான் கேட்கும் கேள்விகளுக்கு அவரே இங்கே பதில் அளித்திருக்கலாம். ஆனால் அவர் இங்கே வராமல், வெளியில் இருந்து கொண்டு அறிக்கை விடுகிறார். கருணாநிதி விட்ட அறிக்கை தொடர்பாகத் தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். நான் கேட்கின்ற கேள்விகள். கருணாநிதியை பார்த்து தான் கேட்டு கொண்டிருக்கிறேன். அதற்கு பதில் சொல்ல வக்கிருந்தால், இங்கே இருந்த தி.மு.க. உறுப்பினர்கள் அதற்கு பதில் சொல்லவேண்டும். பதில் சொல்ல வக்கில்லை என்றால், அவர்களுடைய தலைவரை இங்கே அழைத்து வர வேண்டும், இங்கே பதில் சொல்வதற்கு. அவர்களுக்கு தலைவர் யார் என்ற குழப்பம் வேறு. அவர்களுடைய தலைவர் யார் ? தி.மு.க.வின் தலைவர் என்று குறிப்பிடுகின்ற கருணாநிதியா? அல்லது இங்கே அமர்ந்து இருக்கின்ற எதிர்கட்சித் தலைவரா?

யார் தலைவர் என்பதிலேயே குழப்பம். அந்த தலைவர் கருணாநிதி வேண்டுமென்றால் இந்த அவைக்கு வரலாம். பதில் சொல்லலாம். இவர்களுக்கு கச்சத்தீவை பற்றி எதுவும் தெரியாது என்றால், பேசாமல் இருக்கலாம். எப்படி முதல் அறிக்கையை கருணாநிதி வெளியில் இருந்து கொண்டு விட்டாரோ, அதேபோலவே இன்று நான் எழுப்பும் கேள்விகளுக்கும் கருணாநிதியே பதில்சொல்லட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் அதற்கு மாறாக கச்சத்தீவு என்று சொன்னவுடனேயே ஓட்டம் பிடித்து விட்டார்கள். நான் கேட்க வேண்டிய கேள்விகளை இப்போது நான் கேட்டு முடிக்கிறேன்.

அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி சமாதானம் செய்து பல உரிமைகளுக்கு வழி வகுக்கப்பட்டன என்று தனது அறிக்கையில் கருணாநிதி கூறியிருப்பதிலிருந்தே, கச்சத் தீவு தாரை வார்ப்பதற்கு அவர் ஒப்புக் கொண்டார் என்று தானே பொருள்? ஜன சங்கத் தலைவர் வாஜ்பாய் இது பற்றி வழக்குப் போடப்படும் என்று தெரிவித்தும், தமிழக அரசு ஏன் எந்த வழக்கையும் அப்போது தாக்கல் செய்யவில்லை?  2008-ம் ஆண்டு தனிப்பட்ட முறையில் உச்சநீதிமன்றத்தில் நான் வழக்கு தாக்கல் செய்து, அதன் பின்னர், 2011-ம் ஆண்டு, என்னால் சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தமிழக அரசும் அதில் தன்னை இணைத்துக் கொண்ட பின், தி.மு.க.வால் அரசியல் காரணங்கள் மற்றும் 2014-ம் ஆண்டைய நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து தானே 10.5.2013 அன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

என்னால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பேரில், உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய போது, கருணாநிதியின் தலைமையிலான அப்போதைய தமிழக அரசு ஏன் கச்சத்தீவை தாரை வார்த்தது தவறு என பதில் மனுதாக்கல் செய்யவில்லை?

அப்போதைய தி.மு.க அரசு வலியுறுத்தியதால் தான் கச்சத்தீவுப் பகுதியில்மீன் பிடிக்கும் உரிமை, மீனவர்களின் வலைகளை அங்கே உலர்த்திக்கொள்வதற்கான உரிமை, 1974-ம் ஆண்டு ஒப்பந்த ஷரத்துகளில்சேர்க்கப்பட்டன என்பது உண்மைக்கு மாறான கருத்தல்லவா? ஏனெனில், இதுபோன்ற எந்த ஷரத்தும் 1974-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் இல்லையே ?இவற்றுக்கெல்லாம் தி.மு.க தலைவர் கருணாநிதி பதில் கூறுவாரா? என்று பேசினார்.

முதல்வர் ஜெயலலிதாவின் அனல் தெறிக்கும் பேச்சால் சட்டமன்றமே அதிர்ந்தது. சட்டபேரவையில் வெளிநடப்பு செய்த தி.மு.க.வினருக்கு சபாநாயகர் கடும் கண்டனம் தெரிவித்தார்.