கச்சத்தீவை மத்திய அரசு மீட்க வேண்டும் பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் வலியுறுத்தல்

கச்சத்தீவை மத்திய அரசு மீட்க வேண்டும் பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் வலியுறுத்தல்

சனி, ஆகஸ்ட் 06,2016,

புதுடெல்லி;கச்சத்தீவை மத்திய அரசு மீட்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று அ.தி.மு.க. எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் பேசியதாவது:–

தமிழக மீனவர்கள் மீன்பிடித்த பிறகு ஓய்வெடுப்பதற்கும், வலைகளை உலர்த்துவதற்கும் கச்சத்தீவுக்கு செல்வார்கள். இந்த தீவு தமிழகத்தின் ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமானது. 1974 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி இலங்கை அரசுக்கு இந்திய அரசு கச்சத்தீவை தந்தது வரை அந்தத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானதாகவே இருந்தது.

இந்திய அரசியல் சட்டத்தின்படி அந்த ஒப்பந்தம் குறித்து பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதுபோன்று எந்த ஒப்புதலும் பெறவில்லை. இலங்கைக்கு கச்சத்தீவை அளித்தது குறித்து தமிழக முதல்வர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்து இருக்கிறார்.

இந்த தீவு பாரம்பரிய ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் தமிழகத்துடன் ஆழ்ந்த தொடர்பு உடையது. கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தை நிர்மாணித்தவர் ராமநாதபுரத்தை சேர்ந்த சீனிவாச படையாச்சி. ஒவ்வொரு ஆண்டும் இந்த அந்தோணியார் திருவிழாவில் கலந்து கொள்ள ராமநாதபுரம் தங்கச்சி மடத்தில் இருந்து நூற்றுக்கணக்கான நாட்டுப்படகுகளிலும், எந்திர படகுகளிலும் பக்தர்கள் இந்த தீவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இப்போது புனித அந்தோணியார் ஆலயம் மிகவும் சிதிலமடைந்துள்ளது. இந்த ஆலயத்தை புனரமைக்கவும், பாதுகாக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கச்சத்தீவை மீட்கும்பட்சத்தில் இந்தியாவை சுற்றி தன்னுடைய எல்லையை விரிவாக்கிவரும் சீனாவின் அச்சுறுத்தலையும் தடுத்து நிறுத்த முடியும். எனவே, மத்திய அரசு கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுக்கு மீட்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கே.என்.ராமச்சந்திரன் பேசினார்.