கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரையும், 50 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம்

கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரையும், 50 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம்

20 November 2015

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த அப்பாவி மீனவர்கள், தாங்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பாக் நீரிணையில் அமைதியாக மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களைப் பலமுறை பலவந்தமாக இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றது குறித்து, பல்வேறு தருணங்களில் தாம் கடிதங்கள் மூலம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை நினைவுப்படுத்தியுள்ளார்.

அதன்தொடர்ச்சியாக, கடந்த 18-ம் தேதியன்று, ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி பகுதிகளிலிருந்து 14 மீனவர்கள், தங்களது 3 இயந்திரப் படகுகளின் மூலம் மீன்பிடிப்பதற்காக சென்று கொண்டிருந்தபோது, அவர்களை இலங்கை கடற்படையினர் இடைமறித்து, சிறைப்பிடித்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதேபோல, கடந்த 8-ம் தேதியன்று, பாரம்பரியமான பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, தங்களது படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, திசை மாறி, இலங்கை கடற்கரையில் ஒதுங்கிய 4 மீனவர்கள், இன்னும் இலங்கையிலேயே தவித்துக் கொண்டிருப்பதும் தமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழியமைத்துக் கொண்டிருந்த 47 மீன்பிடி படகுகள், இன்னும் விடுவிக்கப்படாமல், இலங்கை அரசினரின் பாதுகாப்பிலேயே உள்ளதை மிகுந்த வருத்தத்துடன், தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வரவிரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மீன்பிடி படகுகள், மோசமாக சேதமடையக் கூடும் என்பதையும், அதன்காரணமாக, மீன்பிடிப்பதற்குப் பயன்படாமல் போகும் என்பதையும் சுட்டிக்காட்டியிருப்பதோடு, தற்போது தற்காலிகமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் மீனவர்கள், இதேநிலை நீடித்தால், நிலையான பாதிப்பிற்குள்ளாவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் சட்டத்திற்கு மாறான 1974 மற்றும் 1976-ம் வருட இந்திய-இலங்கை ஒப்பந்தங்கள் மற்றும் கச்சத்தீவு தாரைவார்ப்பு ஆகியவையே இப்பிரச்னைக்கு அடிப்படை காரணம் என தமது அரசு உறுதியாக நம்புவதாகவும், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்களுடைய பாரம்பரிய பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கும் வரலாற்று உரிமைகளை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து மீறுவதாகவும், இதனால் தமிழக மீனவர்கள் சொல்ல முடியாத அளவிற்கு சிரமத்திற்கு ஆளாவதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு ஜுன் மாதம் 3-ம் தேதி மற்றும் 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி பிரதமரிடம் வழங்கிய மனுக்களில், தாம் கோரியிருந்த ஆயிரத்து 520 கோடி ரூபாய் செலவிலான ஆழ்கடல் மீன்பிடித்தல் மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கான விரிவான சிறப்பு நிதியுதவி மற்றும் வருடாந்திர பராமரிப்புச் செலவுத் தொகையாக 10 கோடி ரூபாய் போன்ற கோரிக்கைகளுக்கு மத்திய அரசு இன்னமும் ஒப்புதல் வழங்கவில்லை என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்லாயிரக்கணக்கான மீனவ மக்களின் இந்த வாழ்வாதார பிரச்னைக்கு பிரதமரின் தனிப்பட்ட தலையீடு அவசியமாகிறது – இப்பிரச்னையைமேலும் கிடப்பில் போட மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது – இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 14 இந்திய மீனவர்களையும், 50 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க ராஜீய நடவடிக்கைகளை பிரதமர் மேற்கொள்ள வேண்டும் – மேலும், கடந்த 8-ம் தேதி இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கை கடற்கரையில் ஒதுங்கிய 4 மீனவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – இப்பிரச்னையில் பிரதமர் உடடினயாக தலையிட வேண்டும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.