கடலில் மீன்பிடிக்க சென்றபோது மாயமான மீனவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

கடலில் மீன்பிடிக்க சென்றபோது மாயமான மீனவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

திங்கள் , செப்டம்பர் 19,2016,

சென்னை; மீன் பிடிக்க சென்றபோது படகு உடைந்து பலியான மற்றும் மாயமான மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்னை, தண்டையார்பேட்டை வட்டம், வ.உ.சி. நகர், சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சரவணன், ராஜி ஆகிய இருவரும் கடந்த 2015–ம் ஆண்டு நவம்பர் 7–ந் தேதி விசைப் படகில் கடலில் மீன் பிடிக்கும் பணியை மேற்கொண்டிருந்த போது, படகு உடைந்து நீரில் மூழ்கியதில் காணமல் போய், இதுநாள் வரை வீடு திரும்பவில்லை.

அதேபோல, சென்னை, தண்டையார்பேட்டை வட்டம், காசிமேடு, சிங்காரவேலர் நகரைச் சேர்ந்த மில்கியாஸ், அவரது மகன் சகாயராஜ் ஆகியோர் கடந்த ஏப்ரல் 14–ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் ஆந்திராவை நோக்கி படகில் சென்று கொண்டிருந்த போது, திடீரென படகு உடைந்து, இருவரும் நீரில் மூழ்கினர். மில்கியாஸ் உயிரிழந்த நிலையில், அவரது உடல் மட்டும் மீட்கப்பட்டது.

அவருடன் கடலுக்கு சென்ற அவருடைய மகன் சகாயராஜ் இன்னமும் திரும்பவில்லை. இந்த செய்திகளை அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்.

கடலில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த மில்கியாஸின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும், கடலில் மீன் பிடிக்கும் போது, காணமல் போன சகாயராஜ், சரவணன் மற்றும் ராஜி ஆகியோரின் குடும்பங்களின் வறிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும் முதலமைச்சரின் பொது  நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.