கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 லட்சம் பேருக்கு நிலவேம்பு கஷாயம் மற்றும் 80 மருத்துவ ஆய்வாளர்களுக்கு திரவ குளோரினை அமைச்சர்கள் சம்பத் – உதயகுமார் வழங்கினர்

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 லட்சம் பேருக்கு நிலவேம்பு கஷாயம் மற்றும் 80 மருத்துவ ஆய்வாளர்களுக்கு திரவ குளோரினை அமைச்சர்கள் சம்பத் – உதயகுமார் வழங்கினர்

சனி, டிசம்பர் 19,2015,

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 லட்சம் நபர்களுக்கு நிலவேம்பு கஷாயம் மற்றும் 80 மருத்துவ ஆய்வாளர்களுக்கு திரவ குளோரினை அமைச்சர்கள் சம்பத் – உதயகுமார் செல்லாங்குப்பத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் வழங்கினார்கள்.

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.  பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் சார்பாக செல்லாங்குப்பத்தில் அம்மன் கோயில் அருகில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் நிலவேம்பு கஷாயம் 200 நபர்களுக்கு சம்பத் , உதயகுமார்  ஆகியோர் நேரடியாக வழங்கினார்கள். பின்னர் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களிடம் சுகாதாரத்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் மருத்துவ முகாம் நடைபெறுவது குறித்து துணை இயக்குநர் (சுகாதாரம்) டாக்டர்.ஜவஹர்லால்  விளக்கியபோது கடலூர் மாவட்டத்தில் கடந்த 11.11.2015 முதல் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த முகாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இதுவரை எந்த தொற்றுநோயும் இல்லாமல் மருத்துவ துறை போர்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறது. தற்பொழுது டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களை தடுப்பதற்காக மருத்துவ முகாம்களில் நிலவேம்பு கஷாயம் கொடுப்பதும், பிளிச்சிங் பவுடர் வழங்குவதும், திரவ பொருள் குளோரின் வழங்குவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் நிலவேம்பு கஷாயம் 4.5 லட்சம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கஷாயம் 9 வகை மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்டது. அனைத்து வகையான காய்ச்சல்களுக்கும் தடுப்பு மருந்தாக செயல்படுகிறது.

இந்த கஷாயத்தை பவுடராக வழங்கப்படுகிறது. 2 ஸ்பபூன் போட்டு 2 டம்பளர் தண்ணீரை ஊற்றி அரை டம்பளராக வற்றியுடன் குடிக்க வேண்டும். அதேபோல சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு திரவ குளோரின் வழங்கப்பட்டு வருகிறது.  பிளிச்சிங் பவுடர் இதுவரை 20 டன் சுகாதாரத்துறை மூலமாக பெறப்பட்டு அனைத்து முகாம்களில் வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.  இந்நிகழ்ச்சியில் 80 சுகாதார ஆய்வாளர்களுக்கு திரவ குளோரினை அமைச்சர்கள் சம்பத் – உதயகுமார்  ஆகியோர் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில்  கடலூர் நகர மன்ற தலைவர் திரு.ஆர்.குமரன், நகர மன்ற துணைத்தலைவர் திரு.ஜி.ஜே.குமார், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.ரவிச்சந்திரன், நகர் நல அலுவலர் திரு.சிவக்குமார், மருத்துவ அலுவலர் டாக்டர். பாஸ்கர், சித்த மருத்துவர் டாக்டர்.செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.