கனமழைக்கு பலியான மேலும் 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்;முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

கனமழைக்கு பலியான மேலும் 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்;முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய், நவம்பர்-24-2015

சென்னை,

வெள்ளத்தில் மூழ்கி, சுவர் இடிந்து விழுந்து, மின்னல் தாக்கியது என கனமழைக்கு பலியான 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, முதல்-அமைச்சர் ஜெயலலிதா  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வடகிழக்கு பருவமழை

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஆட்டந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த வரதனின் மகன் சின்னசாமி; பழவேற்காடு கிராமத்தைச் சேர்ந்த பூபாலனின் மகன் சேத்தப்பன்; அம்பத்தூர் வட்டம், திருமுல்லைவாயல் கிராமத்தைச் சேர்ந்த நடராஜனின் மகன் மணிமாறன்; திருத்தணி வட்டம், சிறுகுமி கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமாரின் மகன் தர்ஷன்; அம்பத்தூரைச் சேர்ந்த சிவக்குமாரின் மகன் ஹரீஷ்குமார்; பொன்னேரி வட்டம், வெள்ளிவயல் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமனின் மகன் தணிகாசலம் ஆகியோர் வெள்ளப்பெருக்கின் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

சுவர் இடிந்து விழுந்து சாவு

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் வட்டம், கதிர்வேடு கிராமத்தைச் சேர்ந்த பாலசுந்தரின் மகன் கோவிந்தராஜ் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டத்தைச் சேர்ந்த வேடியப்பனின் மகன் சிவா என்கிற சிவன் 16-11-2015 அன்று திருவள்ளூரில் மழை வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம், ஏ.வெள்ளோடு கிராமத்தைச் சேர்ந்த ஜெயபாலின் மகன் சுந்தரராஜ் இடி, மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.

தலா ரூ.4 லட்சம்

இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.