கருணை அடிப்படையில் 62 அலுவலர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கருணை அடிப்படையில் 62 அலுவலர்களின் வாரிசுதாரர்களுக்கு  பணிநியமன  ஆணைகளை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஜூலை, 4 , 2017 ,செவ்வாய்க்கிழமை,

சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிக்காலத்தில் காலமான 62 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச்செயலகத்தில் நேற்று பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சென்னை பெருநகர அபிவிருத்தி பகுதிகள் தவிர மாநிலம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள் மேற்கொள்வதுடன் கூட்டுக் குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதும் ஆகும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியப் பணிகளை திறம்பட செயல்படுத்தி பொதுமக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு உதவிப் பொறியாளர்களின் பணி நியமனம் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். அதன்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 75 பொதுவியல் பொறியாளர்கள் மற்றும் 25 இயந்திரவியல் பொறியாளர்கள், என மொத்தம் 100 உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா. கார்த்திகேயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.