கல்லணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு : முதல்வர் ஜெயலலிதாவுக்கு, விவசாயிகள் நன்றி

கல்லணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு : முதல்வர் ஜெயலலிதாவுக்கு, விவசாயிகள் நன்றி

ஞாயிறு, செப்டம்பர் 25,2016,

முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, கடந்த 20-ம் தேதிமுதல், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கர் மற்றும் டெல்டா பகுதிகளில் 12 லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.  இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், நேற்று முன்தினம் இரவு கல்லணை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து, சம்பா சாகுபடி பணிகளுக்காக கல்லணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பொங்கிவந்த காவேரியை, அமைச்சர்கள், அதிகாரிகள் மலர்தூவி வரவேற்றனர்.

கல்லணையில் இருந்து நேற்று திறந்துவிடப்பட்ட தண்ணீர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் மற்றும் கடலூரின் சில பகுதிகளிலும் சம்பா சாகுபடிக்கு பயன்படவுள்ளது. உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டு, சம்பா மற்றும் தாளடி விவசாயத்திற்கு வழிவகுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட ஆட்சியர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாய பெருங்குடி மக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.