கல்வித் துறைக்கு அதிக நிதியை ஒதுக்கி கல்வியின் தரத்தை உயர்த்தியவர் முதல்வர் ஜெயலலிதா : ‘நல்லாசிரியர் விருது’வழங்கும் விழாவில் அமைச்சர் க.பாண்டியராஜன் பேச்சு

கல்வித் துறைக்கு அதிக நிதியை ஒதுக்கி கல்வியின் தரத்தை உயர்த்தியவர் முதல்வர் ஜெயலலிதா : ‘நல்லாசிரியர் விருது’வழங்கும் விழாவில் அமைச்சர் க.பாண்டியராஜன் பேச்சு

செவ்வாய், செப்டம்பர் 06,2016,

நாட்டிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பள்ளிக்கல்வித் துறைக்கு அதிக நிதியை ஒதுக்கி கல்வியின் தரத்தை முதல்வர் ஜெயலலிதா மேம்படுத்தி வருகிறார் என்றும் கல்வித் துறைக்கு முதல்வர் அறிவித்துள்ள நூற்றுக்கணக்கான திட்டங்களில் எந்தத் திட்டம் நல்லது, எந்தத் திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று கூற வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்றும்  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா க.பாண்டியராஜன் கூறினார்.
ஆசிரியர் தினத்தையொட்டி, பள்ளிக்கல்வித் துறை சார்பில் சிறப்பாக பணியாற்றிய 379 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இவர்களுக்கு வெள்ளிப் பதக்கம், ரூ.10,000 ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி பாண்டியராஜன் பேசியது:-
நாட்டிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பள்ளிக்கல்வித் துறைக்கு அதிக நிதியை ஒதுக்கி கல்வியின் தரத்தை முதல்வர் ஜெயலலிதா மேம்படுத்தி வருகிறார்.
இணையதளத்தை பார்த்தாலே எத்தனையோ தகவல்களை அறியலாம். இதனால் அறிவுக்களஞ்சியமான ஆசிரியர்களுக்கு தங்களது திறமையை நிரூபிக்கும் சவால் ஏற்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு எதைத் தந்தால் ஆசிரியர் என்ற பெயருக்கான பெருமையையும், மரியாதையையும் மீட்டெடுக்க முடியும் என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
ஆசிரியர்களுக்கு பொறுப்புகள்: மாணவர்களிடையே தாழ்வுகளைக் களைதல், எளிதில் புரியும் வகையில் கற்பித்தல், படைப்பாற்றலை வெளிப்படுத்துதல் என பல்வேறு பொறுப்புகள் ஆசிரியர்களுக்கு உள்ளன.
கடைசி வரிசையில் அமரும் மாணவர்களுக்கான தொலைநோக்குப் பார்வை நம்மிடையே இருக்கிறதா என்று ஆசிரியர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். மாணவர்களின் கற்கும் வேகத்தைக் காட்டிலும் ஆசிரியர்கள் விரைவாக கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.
வாழ்வாதாரத்துக்கான திறமை, வாழ்வியல்-கற்றுக்கொள்ளும் திறமைகளை ஆசிரியர்கள் வளர்த்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர்கள் ஒரு குழுவாக ஒருங்கிணைந்து தங்களது பள்ளியை எவ்வாறு உயர்த்த வேண்டும் என்று கலந்தாலோசிக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்களின் கல்வி அறிவையும், மாநிலத்தின் கல்வித்தரத்தையும் மேம்படுத்த முடியும்.
புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தின் நலனுக்கு கெடுதல் விளைவிக்கும் எந்த திட்டத்துக்கும் முதல்வர் ஏற்க மாட்டார். இதில் எந்தமாதிரியான கொள்கைகள் விவாதிக்கப்பட வேண்டும் என்பதில் ஆசிரியர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும்.
கல்வித்துறைக்கு முதல்வர் அறிவித்த நூற்றுக்கணக்கான திட்டங்களில் எந்தத் திட்டம் நல்ல திட்டம், எந்த திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று கூற வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உள்ளது.
ஆசிரியர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்கும் அரசு: ஆசிரியர்களின் கொள்கைக்கும் வார்த்தைக்கு மதிப்பளிக்கக் கூடிய அரசாக அதிமுக அரசு விளங்கிவருகிறது.
எனவே அரசின் கொள்கைகளின் மையமாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். எதிர்கால இந்தியாவின் முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் குழந்தைகளின் படைப்புத் திறனை வெளிக்கொண்டுவருவதுடன், அவர்களின் இயற்கையான திறன்களை வளர்க்க ஆசிரியர்கள் முன்வர வேண்டும் என்றார்.
முன்னதாக, மயிலாப்பூர் எம்எல்ஏ ஆர்.நடராஜ், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் சபீதா, சென்னை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) அழகுமீனா, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் மைதிலி கே.ராஜேந்திரன், பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி, மெட்ரிக் பள்ளிகள் இயக்கக இயக்குநர் அ.கருப்பசாமி உள்ளிட்டோர் பேசினர்.