காங்கிரசுடன் இணைந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமாக இருந்தது திமுக-மானியம் வழங்கியது அ.தி.மு.க : முதல்வர் ஜெயலலிதா பேச்சு

காங்கிரசுடன் இணைந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமாக இருந்தது திமுக-மானியம் வழங்கியது அ.தி.மு.க : முதல்வர் ஜெயலலிதா பேச்சு

வெள்ளி, மே 13,2016,

காங்கிரசுடன் இணைந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமாக இருந்தது திமுக. விலை உயர்வை மக்கள் தலையில் திணிக்காமல் போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியம் வழங்கியது அ.தி.மு.க. தான் என்று திருநெல்வேலியில் நடைபெற்ற பிரம்மாணடமான தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசினார். திருநெல்வேலியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:-

2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது, அனைத்து பிரிவினெல்வரின் நலனுக்காகவும், விவசாயம், ஜவுளித் தொழில், சேவைத் துறை என அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற்றம் அடைய, 54 தலைப்புகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வாக்குறுதிகளை அளித்திருந்தது. அவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் நாங்கள் நிறைவேற்றவுள்ள வாக்குறுதிகளை இப்போது அளித்துள்ளோம். வாக்காளப் பெருமக்களே! நான் அல்லும் பகலும் தமிழக மக்களின் நலன் கருதியே உழைத்து வருகிறேன். ஆனால், திமுக தலைவர் கருணாநிதி ‘தன்’ மக்களுக்காகவே உழைப்பவர். நான் தமிழக மக்களுக்காக திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறேன்.

ஆனால் கருணாநிதி, ‘தன்’ மக்களுக்காக திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தினார். அரசின் வருவாயைப் பெருக்க நான் நடவடிக்கைகள் எடுத்து வருகிறேன். கருணாநிதி  ‘தன்’ மக்களின் வருவாயைப் பெருக்கும் நடவடிக்கைகளையே எடுத்தார். தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட நான் குரல் கொடுத்து வருகிறேன். ‘தன்’ மக்கள் வளமான இலாகாக்களை மத்திய அமைச்சரவையில் பெற குரல் கொடுத்தவர் கருணாநிதி. எனது நடவடிக்கைகள் அனைத்தும் தமிழர் நலனுக்காகத் தான். ஆனால் ‘தன்’ மக்களின் நலனுக்காக தமிழர்களின் நலனை அடகு வைத்தவர் கருணாநிதி. என் வாழ்வே தமிழக மக்களுக்காகத் தான் என நான் வாழ்ந்து வருகிறேன். தன் வாழ்வே ‘தன்’ மக்களுக்காக என வாழ்பவர் தான் கருணாநிதி.

எனவே, தமிழர் வளம் பெற, தமிழ் நாட்டின் நலன் காக்க, தமிழகம் வளர்ச்சி பெற, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நீங்கள் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்புடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன். இலங்கை தமிழர்களின் இனப் படுகொலைக்குக் காரணம் திமுக. அந்த இனப் படுகொலை செய்தவர்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தத் தூண்டியது அனைத்திந்திய அண்ணா திமுக. கச்சத் தீவு தாரை வார்க்கப்பட உடந்தையாய் இருந்தது திமுக. கச்சத் தீவை மீட்க பாடுபடுவது அனைத்திந்திய அண்ணா திமுக. மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் போது வேடிக்கைப் பார்த்து, அவர்கள் பேராசைக்காரர்கள் என பழித்தது திமுக. சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட பாடுபடுவது அனைத்திந்திய அண்ணா திமுக. கர்நாடக அரசு காவேரியின் குறுக்கே அணைகளை கட்ட உறுதுணையாக இருந்தது திமுக. அணைகள் கட்டும் முயற்சியை முறியடிப்பது அனைத்திந்திய அண்ணா திமுக. காவேரி நதிநீர்ப் பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெற்றது திமுக. நடுவர் மன்ற ஆணையை நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றத்தில் வழக்காடுவது அனைத்திந்திய அண்ணா திமுக. முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் கேரளாவுக்கு சாதகமாக நடக்க முற்பட்டது திமுக. திறமையான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கூறி வெற்றி பெற்றது அனைத்திந்திய அண்ணா திமுக.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் கர்நாடகத்தை ஆதரித்தது திமுக. இந்தத் திட்டத்தை நிறைவேற்றியது அனைத்திந்திய அண்ணா திமுக. காவேரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்காதது திமுக. உச்சநீதிமன்றம் மூலம் இதை வெளியிடச் செய்தது அனைத்திந்திய அண்ணா திமுக. தமிழகத்தை இருளில் மூழ்கிடச் செய்தது திமுக. இருண்ட தமிழகத்தை ஒளிமயமாக்கியது அனைத்திந்திய அண்ணா திமுக. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவு அளித்தது திமுக. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை  தடுத்தது அனைத்திந்திய அண்ணா திமுக. மீத்தேன் எரிவாயு திட்டம் மூலம் டெல்டாவை பாலைவனமாக்கத் துடித்தது திமுக. மீத்தேன் திட்ட நிறுவனத்தை தமிழ் நாட்டை விட்டே விரட்டியது அனைத்திந்திய அண்ணா திமுக. தொழிற்சாலைகளுக்கு மூடு விழா நடத்தியது திமுக. புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்தியது அனைத்திந்திய அண்ணா திமுக. மக்களின் நிலங்களை அபகரித்தது திமுக. அபகரிப்பாளர்கள் இடமிருந்து நிலங்களை மீட்டது அனைத்திந்திய அண்ணா திமுக. திரைப்படத் துறையை கபளீகரம் செய்தது திமுக. திரைப்படத் துறையை மீட்டது அனைத்திந்திய அண்ணா திமுக. தனியார் வளம் பெற திட்டங்கள் தீட்டியது திமுக; அரசு நிறுவனங்கள் மூலம் திட்டங்களை செயல்படுத்தியது அனைத்திந்திய அண்ணா திமுக.

இலவசம் வழங்கி குடும்ப நலன் பேணியது திமுக. விலையில்லாமல் பொருட்கள் வழங்கி மக்கள் நலன் பேணியது அனைத்திந்திய அண்ணா திமுக. இணைப்பு என கொள்ளை அடித்தது திமுக.  கொள்ளைகளை வெளிப்படுத்தி குரல் கொடுத்தது அனைத்திந்திய அண்ணா திமுக. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என ஊழல் ஆட்சி நடத்தியது திமுக. ஊழல் இல்லாத ஆட்சியை வழங்குவது அனைத்திந்திய அண்ணா திமுக. மணல், தாதுமணல், கிரானைட் கொள்ளையர்களுக்கு பாதுகாப்பாக இருந்தது திமுக. கொள்ளையர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களை, சட்டத்தை எதிர்கொள்ள வைத்தது அனைத்திந்திய அண்ணா திமுக. தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆக்கியது திமுக. யாரும் தடியே எடுக்காமல் சட்டம் ஒழுங்கை பேணுவது அனைத்திந்திய அண்ணா திமுக. காங்கிரசுடன் இணைந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமாக இருந்தது திமுக. விலை உயர்வை மக்கள் தலையில் திணிக்காமல் போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியம் வழங்கியது அனைத்திந்திய அண்ணா திமுக. காங்கிரசுடன் இணைந்து எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தியது திமுக. எரிவாயு சிலிண்டருக்கு மதிப்புக் கூட்டு வரியை ரத்து செய்தது அனைத்திந்திய அண்ணா திமுக.

காங்கிரசுடன் இணைந்து உர விலை உயர்த்தியது திமுக; உரத்திற்கான வரியை நீக்கியது அனைத்திந்திய அண்ணா திமுக. காங்கிரசுடன் இணைந்து விலைவாசி உயர்வுக்கு வழி வகுத்தது திமுக. விலை  உயர்விலிருந்து ஏழை எளியோரைக் காத்தது அனைத்திந்திய அண்ணா திமுக. மொத்தத்தில் திமுக-வும், காங்கிரசும் கூட்டணி அமைத்து உங்களை கண்ணீரில் தவிக்கவிட்டன. அதை மாற்றி உங்களை கை தூக்கி விட்டு, உங்களது கண்ணீரை துடைத்து, உங்களது முகங்களில் மலர்ச்சியை ஏற்படுத்தியது அனைத்திந்திய அண்ணா திமுக.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதாபேசினார்.