காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் இளையராஜா குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் இளையராஜா குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஆகஸ்ட் 14 , 2017 , திங்கட்கிழமை,

சென்னை : ஜம்மு-காஷ்மீரில் வீரமரணமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் இளையராஜா குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், “ஜம்மு காஷ்மீர் மாநிலம், தெற்கு காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில், இந்திய நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 மகாரெஜிமெண்ட் ராணுவ வீரர், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், கண்டனி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் ஞ.இளையராஜா 12.8.2017 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் திரு. இளையராஜா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த ராணுவ வீரர் இளையராஜாவின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.