கிருஷ்ணகிரியில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர்கள் ஆறுதல்

கிருஷ்ணகிரியில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர்கள் ஆறுதல்

சனி, ஜூன் 04,2016,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில், 17 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து செய்தி அறிந்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டதன்பேரில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து, உதவித்தொகைகளை வழங்கினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற லாரியின் டயர் வெடித்ததில், நிலைதடுமாறி ஓசூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து மற்றும் பின்னால் வந்த கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். விபத்துக் குறித்து செய்தி அறிந்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டதன் பேரில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு. பாலகிருஷ்ணா ரெட்டி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.அவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கினர். விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து, தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினர். மேலும், விபத்து நடந்த இடத்தையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.