கிள்ளியூர் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் அ.தி.மு.க. வேட்பாளர் மேரிகமலபாய் உறுதி

கிள்ளியூர் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் அ.தி.மு.க. வேட்பாளர் மேரிகமலபாய் உறுதி

கிள்ளியூர் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என அ.தி.மு.க. வேட்பாளர் மேரி கமலபாய் தேர்தல் பிரசாரத்தில் உறுதி அளித்தார்.

அ.தி.மு.க. வேட்பாளர்

கிள்ளியூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக மேரி கமலபாய் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வீடு-வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். மேலும், பாலூர், வேங்கோடு, வெள்ளையம்பலம், சடையன்குழி, தொலையாவட்டம், மாதாபுரம் போன்ற பகுதிகளில் திறந்த வாகனத்தில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தலி நான் வெற்றி பெற்றவுடன், கிள்ளியூர் தொகுதியில் பழுதடைந்த அனைத்து சாலைகளும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தொகுதியில் உள்ள குளங்கள் பல ஆண்டுகளாக தூர்வாராமல் பாழடைந்து வருகின்றன. நான் வெற்றி பெற்றவுடன் இந்த குளங்கள் தூர்வாரி ஆழப்படுத்தி விவசாயம் மேம்பட பாடுபடுவேன்.

கிள்ளியூர் தொகுதியில் ஏழை மாணவ-மாணவிகளின் கல்வி மேம்பட அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும். கடலோர மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். நெசவாளர்கள் நலன் காக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். சுய உதவி குழுக்களின் செயல்பாட்டை ஊக்குவித்து பெண்கள் பொருளாதாரத்தில் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதியில் உள்ள குக்கிராமங்களுக்கும், தேவையான இடங்களுக்கு அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்றவுடன் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் செல்போன் வழங்கப்படும். விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். அவருடன் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடன் சென்றனர்.