கூடங்குளம் அணுமின் நிலையத்தின்முதல் உலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு – பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்கள்

கூடங்குளம் அணுமின் நிலையத்தின்முதல் உலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு – பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்கள்

புதன், ஆகஸ்ட் 10,2016,

கூடங்குளம் முதலாவது அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் புதின், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் இதில் பங்கேற்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரு அணுஉலைகள் உள்ளன. இதில், முதல் உலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது. காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் இந்த நிகழ்வானது ரஷிய தலைநகர் மாஸ்கோ, புது தில்லி, சென்னை, கூடங்குளம் அணுமின் நிலையம் என 4 இடங்களில் இருந்து நேரடி ஒளிபரப்பாகிறது.

ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் காணொலிக் காட்சி வாயிலாக, முதல் உலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளனர்.

தமிழக அரசின் தலைமைச் செயலர் பா.ராமமோகன ராவ், எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் மு.சாய்குமார் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

கூடங்குளத்தில் நடைபெறும் நிகழ்வில் இந்திய அணுமின் சக்தி கழகத் தலைவர் எஸ்.கே.சர்மா, அணுஉலை வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் மற்றும் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.