கூடங்குளம் அணுமின் நிலையம் அமைய ஒத்துழைப்பு வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி நன்றி

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைய ஒத்துழைப்பு வழங்கிய  முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி நன்றி

வியாழன் , ஆகஸ்ட் 11,2016,

கூடங்குளம் அணுஉலை நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. காணொலிக்காட்சி மூலமாக நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதலாவது அலகினை நாட்டுக்கு அர்ப்பணித்த பிறகு தில்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இந்திய-ரஷிய கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள கூடங்குளம் முதலாவது அலகானது, மாசற்ற மின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் தொடர் முயற்சிக்கு வலிமை சேர்க்கும் வகையில் உள்ளது.

ரஷியாவுடனான உறவை இந்தியர்கள் பெரிதும் விரும்புகின்றனர். தனிப்பட்ட முறையில் நானும் இரு நாட்டு நட்புறவுக்கு பெரிதும் மதிப்பளிக்கிறேன். எனவே, நாம் கூட்டாக இணைந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அலகினை நாட்டுக்கு அர்ப்பணிப்பது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. இந்த நிகழ்வு, இந்திய-ரஷிய கூட்டுறவில் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமையான வளர்ச்சிப் பாதையை உருவாக்க வேண்டியது நம் இருவரின் (ரஷியா-இந்தியா) கடமை என்பதை இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகிறது. இது, இரு நாட்டு நல்லுறவின் வலிமைக்கு மற்றோர் உதாரணமாக மட்டுமன்றி, நமது நட்புறவைக் கொண்டாடும் வகையிலும் அமைந்துள்ளது. மேலும், அணுசக்தித் துறையில் நமது கூட்டு ஒத்துழைப்புக்கான தொடக்கமே இந்த நிகழ்ச்சி.கூடங்குளம் அணுமின் நிலையத்தை உருவாக்கிய இந்திய, ரஷிய விஞ்ஞானிகள் குழு, தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு ஆகியோருக்கு இந்த நாள், மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்துள்ளது. அவர்களின் கடுமையான உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் நான் தலை வணங்குகிறேன். மேலும், அவர்களின் உழைப்புக்குப் பலன் கிடைத்திருப்பதற்கு அவர்களை வாழ்த்துகிறேன் என்றார் மோடி.

மேலும்,இந்த அணுமின் நிலையம் அமைவதற்கு, தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதாவின் பங்கு மகத்தானது என்றும் அதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.