கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் அட்டை, விவசாயிகளுக்கு ரூபே கடன் அட்டை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் அட்டை, விவசாயிகளுக்கு ரூபே கடன் அட்டை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

ஜூன் 13, 2017,செவ்வாய் கிழமை, 

சென்னை : மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் அட்டைகளையும், விவசாயிகளுக்கு ருபே விவசாயக்கடன் அட்டைகளையும் வழங்கி, 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் புதிதாகநிறுவப்பட்டுள்ள 40 ஏடிஎம் இயந்திரங்களின் சேவையையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

”மாநிலத்தில் உள்ள பிற வங்கிகளுக்கு இணையாக வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் வகையில் மைய வங்கியியல் சேவை (கோர் பாங்கிங்) கடந்த 2012-ம் ஆண்டு முதல் கூட்டுறவு வங்கிகளிலும்செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்த கட்ட நடவடிக்கையாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் 19 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஏடிஎம் அட்டைகள் வழங்கும் சேவை, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெறும் விவசாயிகளில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்குகளை தொடங்கியுள்ள 4 லட்சத்து 56 ஆயிரம் பேருக்கான ரூபே கடன் அட்டைகள் ஆகியவற்றை முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

மேலும் இதர வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளர்களும் பயன்பெறும் வகையில் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் புதியதாக நிறுவப்பட்டுள்ள 40 ஏடிஎம் இயந்திரங்களின் சேவையையும் முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதன் மூலம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மற்றும் விவசாயிகள், ஏடிஎம் அட்டை மற்றும் ரூபே விவசாய கடன் அட்டை வாயிலாக நாட்டில் உள்ள அனைத்து ஏடிஎம் இயந்திரங்களிலும் பணப்பரிவர்த்தனை செய்யலாம்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், கூட்டுறவுத்துறை செயலர் பிரதீப் யாதவ், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.ஞானசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.