கைத்தறிக்கு ஜிஎஸ்டியில் இருந்து விரைவில் விலக்கு கிடைக்கும் : அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நம்பிக்கை

கைத்தறிக்கு ஜிஎஸ்டியில் இருந்து விரைவில் விலக்கு கிடைக்கும் : அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நம்பிக்கை

ஆகஸ்ட் 2 , 2017 , புதன்கிழமை,

சென்னை : கைத்தறி தொழிலுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விரைவில் விலக்கு கிடைக்கும் என்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நம்பிக்கை தெரிவித்தார்.

தேசிய கைத்தறி தினத்தையொட்டி நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் கைத்தறி துணிகள் சிறப்பு கண்காட்சியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார். கண்காட் சியை பார்வையிட்ட பிறகு நிருபர் களிடம் அவர் கூறியதாவது:

கைத்தறி நெசவாளர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக 2015-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி தேசிய கைத்தறி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதை யொட்டி சிறப்புக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த கண் காட்சியில் கைத்தறி துணிகளுக்கு சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படும். வரும் 7-ம் தேதி நடைபெறும் விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு சிறந்த நெசவாளர்களுக்கு விருதுகள் வழங்குவார்.

கைத்தறி நெசவு என்பது குடிசை தொழில். கைத்தறி நெசவாளர்களுடைய வீடுகளில் குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து துணிகளை உற்பத்தி செய்கின்றனர். எனவே இதை பெரிய தொழிலாகக் கருதக்கூடாது. முன்பு கைத்தறி துணி களுக்கு வாட் வரி கிடையாது. ஆனால் தற்போது ஜிஎஸ்டி விதிக் கப்பட்டுள்ளது. இதை தமிழக நிதியமைச்சர் மத்திய நிதியமைச்சரிடம் எடுத்து கூறி கைத்தறி துணிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். மத்திய நிதியமைச்சர் பரிசீலித்து முடிவு எடுப்பதாக உறுதியளித்துள்ளார். எனவே இந்த பிரச்சினைக்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்றார்.

இந்த கண்காட்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பங்கேற்றுள்ளன. காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருபுவனம் உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், பருத்தி சேலைகள், சுங்கடி சேலைகள், போர்வைகள், துண்டுகள் உள்ளிட்ட பல் வேறு கைத்தறி துணி வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் மேற்கு வங்காளம், ஒடிசா, அசாம், ஜார்க்கண்ட் போன்ற வெளிமாநில கைத்தறி துணிகள் விற்பனைக்கு உள்ளன.இந்த கண்காட்சி வரும் 7-ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். தமிழ்நாட்டு கைத்தறி ரகங்களுக்கு மட்டும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தொடக்க விழா நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் முனியநாதன், கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.