கொள்ளையர்கள் தாக்கி உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் : 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிப்பு

கொள்ளையர்கள் தாக்கி உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் : 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிப்பு

வெள்ளி, ஜூன் 17,2016,

ஓசூர் தலைமை காவலர் முனுசாமி குற்றவாளிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்கிரிப்பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஓசூர் தலைமை காவலர் முனுசாமி செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தது துயரம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த காவலர் முனுசாமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா காயமடைந்த உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் தலைமை காவலர் தனபால் ஆகியோர் பூரண குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்று தாம் விரும்புவதாக தெரிவித்துள்ளார். 

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த காவலர் முனுசாமி குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்த நாகராஜ் மற்றும் தனபால் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், வழங்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் காவலர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.