சட்டசபையில் சட்டமசோதாக்களை கிழித்தெறிந்து தி.மு.க உறுப்பினர்கள் ரகளை : சபாநாயகர் தனபால் கடும் கண்டனம்

சட்டசபையில் சட்டமசோதாக்களை கிழித்தெறிந்து தி.மு.க உறுப்பினர்கள் ரகளை : சபாநாயகர் தனபால் கடும் கண்டனம்

சனி, செப்டம்பர் 03,2016,

சென்னை  ; தமிழக சட்டபேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் சட்ட மசோதாக்களை கிழித்தெறிந்து பெரும் ரகளையில் ஈடுபட்டனர், தி.மு.க.வினரின் இந்த செயலுக்கு சபாநாயகர் தனபால் கடும் கண்டனம் தெரிவித்தார்.

தமிழக சட்டபேரவையில் பொதுத்துறை, சட்டமன்றம் உள்ளிட்ட 7 முக்கிய துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழகத்தில் காவலர் வீடுகள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, காவலர் வீட்டு வசதி வாரியத்தை அமைத்ததே எம்.ஜி.ஆர் தான். அந்த வாரியத்தை கலைத்து, இழுத்து மூடியது தி.மு.க ஆட்சி. எனவே அதை பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம் என்று தி.மு.க பேசுவற்கு எந்த அருகதையும் இல்லை என்று தெரிவித்தார். அப்போது மு.க.ஸ்டாலின் தெரிவித்த சிலவார்த்தைகளை சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.

இதனால் தி.மு.க.வினர் பெரும் ரகளையில் ஈடுப்பட்டனர். உடனே சபாநாயகர் அந்த விவகாரத்தில் தனது தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை. மறுபரீசிலனையும் செய்யமுடியாது என்று அறிவித்தார். மேலும் அவையில் முக்கியமான அரசினர் தீர்மானம் வரவிருக்கிறது அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சபாநாயகர் தீர்ப்பை விமர்சிக்க முடியாது என்றும் இன்றைக்கு குழப்பம் விளைவிக்காமல் அவையை அமைதியாக நடத்த ஒத்துழையுங்கள் என்று தி.மு.க.வினரை சபாநாயகர் கேட்டுக்கொண்டார். தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அதற்கு மதிப்பளிக்காமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால் அரசினர் தனித்தீர்மானத்தை சீர்குலைக்க முயற்சி செய்கீறீர்கள். பலமுறை உங்களை மன்றாடி கேட்டுக்கொண்டேன்.

நீங்கள் ஒத்துழைப்பது மாதிரி தெரியவில்லை இந்த வா்ககுவாதங்களை இதோடு விட்டு விட்டு அரசினர் தனித்தீர்மானத்திற்கு ஒத்துழையுங்கள் என்று கேட்டுக்கொண்டார். சபாநாயகரின் கடும் பிரயதனங்களுக்கு பின்னர் பகல் 12.15 மணி முதல் 12.47 வரையிலான தி.மு.க.வினரின் அமளி முடிந்து சபையில் அமைதி திரும்பியது.  தனித்தீர்மானம் நிறைவேறிய பின்னர், பகல் 1.37 மணிக்கு  மீண்டும் அந்த சொற்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது குறித்து மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று தி.மு.க.வினர் கடும் அமளியில் ஈடுப்பட்டனர். சபாநாயகருக்கு எதிரான கோஷங்களை எழுப்பி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் சட்டபேரவையில் பெரும் பரபரப்பு நிலவியது. ஆனால் சபாநாயகர் தனது தீர்ப்பை மறுபரீசிலனை செய்ய முடியாது என்றும் மானியக்கோரிக்கையை நிறைவேற்றவிடாமல் ரகளை செய்த தி.மு.க.வினருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ஆளுங்கட்சி வரிசையில் உள்ள உறுப்பினர்கள் அமைதி காப்பது போல் நடந்து கொள்ள வேண்டும் என்று தி.மு.க.வினருக்கு அறிவுரை கூறினார். இதற்கிடையே ஏதோ உடைப்பது போல் சத்தம் கேட்டதால் சபாநாயகர் எழுந்து ஏதோ உடைப்பது போல் சத்தம் கேட்கிறது. அதை அனுமதிக்க முடியாது அவையை நடத்த அமைதியாக ஒத்துழையுங்கள் என்று தி.மு.க.வினருக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் தி.மு.க.வினர் அதை கேட்பது மாதிரி தெரியவில்லை. தொடர்ந்து ரகளையில் ஈடுப்பட்டவண்ணமிருந்தனர். இதைத்தொடர்ந்து அமளிகளுக்கு இடையே நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் மானியக்கோரிக்கை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

13 அவசர சட்டமுன்வடிவுகளும் அவையில் முன்வைக்கப்பட்ட ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. தி.மு.க.வினரின் கூச்சல்-குழப்பத்திற்கு இடையே அவை அலுவல்கள் சத்தமின்றி நடந்தன. இதனால் தி.மு.க.வினர் கோஷமிட்டு பார்த்தனர். மாலை 3 மணியை கடந்ததால் கோஷமிட முடியாமல் அமைதியில் ஆழ்ந்தனர். இதற்கிடையே நகராட்சி மற்றும் பேரூராட்சித்தலைவர்களை கவுன்சிலர்களே தேர்வு செய்யும் சட்டமுன் வடிவு ஆய்வுக்கு முன்வைக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் தலைவர் ராமசாமி தனது கருத்துக்களை தெரிவித்தார். இதனால், வேறு வழியில்லாமல் தி.மு.க எம்.எல்.ஏக்கள் அமைதியாக அமர்ந்தனர்.  இது குறித்து பேசிய, தி.மு.க. எம்.எல்.ஏ தாம்பரம் ராஜா, இந்த சட்டம் கொண்டு வரப்படுவதால் பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சபாநாயகர் அவரது எதிர்ப்பை பதிவு செய்து கொள்வதாக அறிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இதுபோன்ற சட்டம் 2006-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியின் போது கொண்டு வரப்பட்டது தான். முதல்வர் ஜெயலலிதா பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தார். 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்கும்முதல்வர் ஜெயலலிதா தான் சட்டத்திருத்தம் கொண்டு வந்தார். எனவே இந்த சட்டமுன்வடிவால்  பெண்களுக்கான இடஒதுக்கீடு வலுப்படுத்தப்படும் என்றும் மேற்கு வங்கம், மேகாலயா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த சட்டம் தான் இருக்கிறது. எனவே இது ஒன்றும் புதிதானதல்ல என்றும் தெரிவித்தார். இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்டமுன்வடிவு  சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் தனபால் தெரிவித்தார். இதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்த அனைத்து சட்டமசோதாக்களையும் கிழித்தெறிந்தனர், இதனால் சட்டபேரவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் நடத்திய இந்த செயலுக்கு  சபாநாயகர் தனபால் கடும் கண்டனம்  தெரிவித்தார்.

இதுகுறித்து சபாநாயகர் தனபால் பேசுகையில்., உங்களது நடவடிக்கைகளையெல்லாம் நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள், நீங்கள் சட்டத்தை எப்படி மதிக்கீறீர்கள் என்று இதிலிருந்தே தெரிகிறது என்று சபாநாயகர் தெரிவித்தார். இந்த நிலையில், தி.மு.க.வினர் வழக்கம்போல் அவையிலிருந்து வெளிநடப்பு தெரிவித்தனர்.