சட்டசபையில் ரகளையில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட் ; சபாநாயகர் தனபால் நடவடிக்கை

சட்டசபையில் ரகளையில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட் ; சபாநாயகர் தனபால் நடவடிக்கை

வியாழக்கிழமை , ஆகஸ்ட் 18, 2016,

தமிழக சட்டப்பேரவையை நடத்தவிடாமல், தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சல்-குழப்பம் ஏற்படுத்தி ரகளையில் ஈடுபட்டதால், சட்டப்பேரவையிலிருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். பேரவை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்து வரும் தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரையும் ஒருவார காலத்திற்கு சஸ்பெண்ட் செய்து சட்டப்பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டசபையில் நேற்று வீட்டு வசதித்துறை, தகவல் தொழில்நுட்ப துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. விவாதத்தில் கலந்து கொண்டு அ. தி.மு.க. உறுப்பினர் குணசேகரன் பேசினார். அவர் பேசும்போது, நமக்கு நாமே என்று கூக்குரலிட்டவர்கள் கோட்டையை பிடிக்க முடியவில்லை என்று விமர்சனம் செய்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரை பேச விடாமல் தி.மு.க. உறுப்பினர்கள் சபையில் எழுந்து நின்று ரகளையில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் பலமுறை தி.மு.க. உறுப்பினர்களை அமைதியாக இருக்குமாறு வேண்டிக் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரது வேண்டுகோளை பொருட்படுத்தாமல், தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து சபையில் கூச்சல் போட்டும், அவரவர் இருக்கையிலிருந்து எழுந்து சபாநாயகர் இருக்கை நோக்கி வந்தபடியும் அமளியில்  ஈடுபட்டனர். இதே நிலை  நீண்ட நேரம் நீடித்தது.  இதை தொடர்ந்து சபாநாயகர் எதிர்கட்சி உறுப்பினர்களை சபையிலிருந்து வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார். சபை காவலர்கள் உள்ளே வந்தனர். அப்போது சபையிலிருந்து வெளியேற மறுத்து தி.மு.க. உறுப்பினர்கள் சபைக்குள்ளேயே உட்கார்ந்து கூச்சல் போட்டனர். சில உறுப்பினர்களை குண்டு கட்டாக தூக்கி கொண்டு போய் சபை காவலர்கள் வெளியேற்றினார்கள். பல தி.மு.க. உறுப்பினர்கள் சபைக்குள்ளேயே உட்கார்ந்து வெளியேற மறுத்து ரகளை செய்து கொண்டிருந்தார்கள். அதை தொடர்ந்து அவை முன்னவரும், நிதி அமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

சட்டசபையின் நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்ற சொல்லி சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவு பிறப்பித்த பிறகும் அவர்கள் சபையை விட்டு வெளியேறாமல் உள்ளே உட்கார்ந்து அமளி செய்கிறார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.

அவருடைய தீர்மானம் சபையின் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். அதை தொடர்ந்து சபாநாயகர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்கள் சபையை நடத்தவிட்டாமல் குந்தகம் விளைவித்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது உச்சக்கட்டமாக போய் ஆளுங்கட்சி உறுப்பினர்களை பேசவிடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அவையின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், அவர்களை நான் வெளியேற்ற உத்தரவிட்டேன். அதன்பிறகும் சபையை விட்டு வெளியேறாமல் மீண்டும் சபையிலேயே உட்கார்ந்து ரகளை செய்தனர். எனவே அவை முன்னவரின் தீர்மானத்தை தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களை இன்றிலிருந்து அடுத்த ஒரு வாரத்திற்கு சபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிடுகிறேன் என்று சபாநாயகர் தனபால் கூறினார்.

மேலும் வீட்டுவசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் ஆகியோர் தங்களது பதில்களை நாளை ( இன்று ) வழங்குவார்கள் என்றும் சபாநாயகர் தனபால் அறிவித்தார். அதை தொடர்ந்து  அவைக்காவலர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களை சட்டசபையிலிருந்து வெளியேறினார்கள்.