சட்டசபை தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்டு அ.தி.மு.க.,வில் குவியும் மனுக்களால், தி.மு.க., திகைப்பு!

சட்டசபை தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்டு அ.தி.மு.க.,வில் குவியும் மனுக்களால், தி.மு.க., திகைப்பு!

வெள்ளி, ஜனவரி 29,2016,

சட்டசபை தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்டு அ.தி.மு.க.,வில் குவியும் மனுக்களால், தி.மு.க., திகைப்பு அடைந்துள்ளது; இதுவரை 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தி.மு.க.,வில் வெறும் 200 பேர் மட்டுமே விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

துவக்க நாளில் இருந்தே விருப்ப மனு கொடுக்க வந்த கூட்டத்தால் அ.தி.மு.க., தலைமை அலுவலகம் களை கட்டியது. ‘சீட்’ கேட்டு மனு கொடுக்கும் ஒவ்வொருவரும் முதலில் முதல்வர் போட்டியிட மனு கொடுத்த பின்னரே, தனக்கு பணம் கட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இதனால் ஒன்பதாம் நாளான நேற்றும் கட்சி அலுவலகம் நிரம்பிவழிந்தது. விண்ணப்பம் வாங்க கட்சி நிர்வாகிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி விருப்ப மனுக்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தொட்டது.

அதேபோல தி.மு.க.,வில் விருப்ப மனு 24ம் தேதி முதல் வாங்கப்படுகிறது. நேற்று வரை 200 விண்ணப்பங்கள் மட்டுமே கட்சியினரால் வாங்கப்பட்டு உள்ளன.’சீட்’ கேட்பதில் அ.தி.மு.க., வினர் இடையே காணப்படும்உற்சாகமும் வரவேற்பும் தி.மு.க.,வை திகைப்படைய செய்துள்ளது.

தி.மு.க.,வினரின் ஆர்வக் குறைவுக்கான காரணம் குறித்து அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: அ.தி.மு.க.,வில் யாருக்கு வேண்டுமானாலும் ‘சீட்’ கிடைக்கும். அதனால், அடிமட்ட தொண்டர்களும் நம்பிக்கையுடன் மனு கொடுக்கின்றனர்.

தி.மு.க.,வில் அப்படி அல்ல. மேல் மட்ட தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், அவர்களின் வாரிசுகள் என குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். எனவே, பணத்தை வீணடிக்க யாரும் விரும்பவில்லை என்று அவர் கூறினார்.