சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால் தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது : சேலம் மக்கள் வெள்ளத்தில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால் தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது : சேலம் மக்கள் வெள்ளத்தில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

வியாழன் , ஏப்ரல் 21,2016,

சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால் தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா பெருமிதத்துடன் தெரிவித்தார்.
 சேலத்தை அடுத்த மகுடஞ்சாவடியில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் 53 வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பேசியது:
 கடந்த 2006 முதல் 2011 வரை நடைபெற்ற திமுக ஆட்சி ஓர் அராஜக ஆட்சி. மக்களின் நலனுக்கான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. அது மக்களை இருளில் தள்ளிய ஆட்சி.
 சுமார் 10 மணி நேரம் மின்வெட்டு என தமிழகத்தையே இருளில் மூழ்கடித்த ஆட்சி. அதுமட்டுமல்லாமல், அது ஓர் இருண்ட ஆட்சி, காட்டாட்சி என்று கூடச் சொல்லலாம்.
 அதிமுக ஆட்சியில் யாரும் எந்தவித அச்ச உணர்வும் இன்றி வாழ முடிகிறது நடமாட முடிகிறது. தங்களது சொத்துகளை அனுபவிக்க முடிகிறது.
 திமுக அரசில், சமூக விரோதிகளின் நண்பனாக ஆட்சியாளர்களே, திமுகவினரே மாறி விட்ட காரணத்தால், சமூக விரோதிகளைக் கண்டு பயப்படுபவர்களாக காவலர்கள் மாறி விட்டார்கள்.
 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற உடனேயே இந்த நிலைமை மாற்றப்பட்டது. எனவேதான், காவலர்களைக் கண்டு சமூக விரோதிகள் அஞ்சும் நிலை உருவானது. சட்டத்தின் ஆட்சி இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது.
 ஆனால், திமுக-வில் குண்டர்கள் இருக்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற ஒரு பழியை நான் சொல்கிறேன் என்று யாரும் தவறாக எண்ணி
 விடக் கூடாது. திமுகவில் குண்டர்கள் இருக்கிறார்கள் என்று நான் மட்டுமா சொல்கிறேன், கருணாநிதியே சொல்லி இருக்கிறார்.
 கடந்த 2012 பிப்ரவரி 3 ஆம் தேதி நடந்த திமுக பொதுக் குழு கூட்டத்தில் கட்சியில் பிளவை ஏற்படுத்த குண்டர்கள் முயற்சிப்பதாகக் கூறியுள்ளார் கருணாநிதி.
 திமுகவிலிருந்த பல்வேறு அதிகார மையங்களும் காவல் துறையினரை பணி செய்ய விடாமல் குறுக்கிட்டனர். காவல் துறை பணிகளில் குறுக்கீடு செய்வதை ஆதரித்தவர்தான் கருணாநிதி.
 திமுக அரசால் அமைக்கப்பட்ட தமிழ்நாடு காவல் ஆணையம், அரசியல்வாதிகள் காவல் நிலையத்திற்குள் செல்வது தவிர்க்கப்பட வேண்டும். அதற்கான நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். எனவே, அரசியல்வாதிகள் ஏதேனும் கோரிக்கை அளிக்க வேண்டுமென்றால் அதனை துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் அவருக்கு மேல் உள்ள அதிகாரிகளைச் சந்தித்து வழங்க வேண்டும் என ஒரு பரிந்துரையை அளித்தது.
 இதனைப் பரிசீலித்த அப்போதைய முதல்வர் கருணாநிதி, அரசியல்வாதிகள் காவல் நிலையங்களுக்கு செல்வதைத் தவிர்ப்பது என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது. எனவே, அதனை நடைமுறைப்படுத்த இயலாது எனத் தெரிவித்து, அந்தப் பரிந்துரையை ஏற்க முடியாது என ஓர் அரசாணையை வெளியிடச் செய்தார்.
 அன்றைய திமுக அரசும், திமுகவினரும் காவல் நிலையங்களுக்குச் சென்று காவலர்களை அச்சுறுத்திய காரணத்தினால்தான் சட்டம்-ஒழுங்கு அப்போது சீர்குலைந்திருந்து. அதை மாற்றி, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தியது அதிமுக அரசு தான்.
 தற்போது, எந்த அரசியல்வாதியும் காவல் நிலையத்திற்கு சென்று காவலர் பணிகளில் தலையீடு செய்ய முடியுமா? முடியாது. எனவேதான், சட்டம்-ஒழுங்கு சீராக பராமரிக்கப்படுகிறது. குற்றங்கள் குறைந்து வருகின்றன.
 நில அபகரிப்பு அதிக அளவில் இருந்த காரணத்தால்தான், அச்சுறுத்தல்களையும் மீறி 2006-11 வரை திமுக ஆட்சியில் நில அபகரிப்பு மோசடி, போலி பத்திரங்கள் என 6,615 புகார்கள் பெறப்பட்டிருந்தன.
 2011 இல் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் நில அபகரிப்பு புகார்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் நில அபகரிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
 மாவட்டங்களில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
 மேலும் ரூ.3,678 கோடி மதிப்புள்ள, 5,193 ஏக்கர் நிலம் மற்றும் 35 லட்சத்து 78 ஆயிரம் சதுர அடி வீட்டு மனைகள் நில அபகரிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
 அகில இந்திய அளவில் ஆண்டுதோறும் குற்ற நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தமிழகத்தில் மட்டுமே குற்றங்கள் குறைந்து வருகின்றன.
 திமுகவினர் வாக்குச் சேகரிக்க உங்களிடம் வரும்போது எங்கள் நிலங்களை, வீடுகளை, உடைமைகளைப் பறிகொடுக்கவா உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டு விரட்டி அடியுங்கள்.
 அதிமுக எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன், மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும்.
 முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும். கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும். குடிப் பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் லட்சியத்தை அடைவோம் இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.